ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது

Updated : டிச 03, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (8)
Share
ரேஷன் கடை, தமிழக அரசு, ஒரே கடை, தடை, அரிசி கார்டு

சர்க்கரை ரேஷன் கார்டுகள், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டதால், தமிழகத்தில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை செயல்படுத்த, உணவுத்துறை தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.

தமிழகத்தில், மக்கள் விருப்பத்தின்படி, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதன்படி, அரிசி கார்டுக்கு, அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும்; சர்க்கரை கார்டுக்கு, அரிசி தவிர்த்த, மற்ற பொருட்களும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு நாடு முழுவதும், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதனால், ரேஷன் கார்டுதாரர்கள், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம்.

அதாவது, ரேஷன் கார்டு வைத்துள்ள பிற மாநிலத்தவர்கள், தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கலாம். தமிழக கார்டுதாரர்கள், மற்ற மாநிலங்களில் பொருட்கள் வாங்கலாம். தமிழகத்தில் மட்டும், இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனால், ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்தன.
இருப்பினும், 'ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படும்; அத்திட்டத்தில், பிற மாநிலத்தவருக்கு, அரிசி, கோதுமை வழங்கினால், அதற்கு பணம் வசூலிக்கப்படும்' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார். அவ்வாறு, பிற மாநிலத்தவருக்கு, அரிசியை விலைக்கு வழங்கினால், தமிழக சர்க்கரை கார்டுதாரர்களும், அதை கேட்க வாய்ப்புள்ளது. இதனால், அரசுக்கு கூடுதல் செலவாகும் என, உணவுத்துறை அதிகாரிகள் கருதினர். இந்நிலையில், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல், சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கான வாய்ப்பை, அரசு சமீபத்தில் வழங்கியது.

இதனால், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி கிடைக்கும் என்பதால், அவர்கள், ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், பிற மாநிலத்தவருக்கு அரிசி வழங்குவதை எதிர்க்க மாட்டார்கள். எனவே, ஒரே ரேஷன் கார்டு திட்டத்திற்கு இருந்த தடை நீங்கியதால், அத்திட்டத்தில் இணைய, உணவுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X