சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலி: கன மழையால் துயர சம்பவம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலி: கன மழையால் துயர சம்பவம்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Share
 சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலி:  கன மழையால் துயர சம்பவம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால், சுற்றுச்சுவர் இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்ததில், நான்கு சிறார்கள் உட்பட, 17 பேர் பலியாகினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி, நடூர் கண்ணப்பன் லே - அவுட்டில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, உறவினர்களான ஆனந்தகுமார், 40, அருக்காணி, 45, சிவகாமி, 50, ஓவியம்மாள், 50, ஆகியோரின் வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. காய்கறி மண்டிகளில் கூலி வேலை பார்க்கும், இந்த நான்கு குடும்பத்தினரும், 'ஹாலோ பிளாக்' கற்களில் சுவர் எழுப்பி, அதன் மீது ஓடு வேய்ந்து, வசித்து வந்தனர்.முன்தினம் இரவு முதலே, கன மழை பெய்ததால், உறவினர்கள் அனைவரும், வீட்டிற்குள் முடங்கிஇருந்தனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த திலகவதி, 38, என்பவரும், இவர்களது வீட்டில் படுத்திருந்தார். மொத்தம், 17 பேர், நான்கு வீடுகளில் துாங்கிக் கொண்டு இருந்தனர்.

இவர்களது வீடுகளின் பின்புறம், 'சக்கரவர்த்தி துகில் மாளிகை' ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியம், 66, என்பவருக்கு சொந்தமான, 15 அடி உயரம், 50 அடி நீளம் உடைய, கருங்கற்களில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இருந்தது.கன மழை காரணமாக, ஓடைகளிலும், பள்ளங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, சுப்பிரமணியத்திற்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிந்து, நான்கு வீடுகளின் மீது விழுந்தது.ஆழ்ந்த துாக்கத்தில் இருந்தவர்கள், அலறி கூச்சல் போடக் கூட வாய்ப்பில்லாத வகையில், கருங்கல் சுவர், அவர்கள் மீது விழுந்தது. வீடுகள் இருந்த இடம் தெரியாமல், சுற்றுச்சுவர் கற்கள் மட்டுமே குவிந்து கிடந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில், கற்கள், மண் குவியலுக்கு அடியில், புதைந்து கிடந்த உடல்கள், ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன.நான்கு வீடுகளிலும் இருந்த, நான்கு சிறார்கள் உட்பட, 17 பேரும், துாக்கத்திலேயே இறந்தனர். கோவை கலெக்டர் ராஜாமணி, எஸ்.பி., சுஜித் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கும், அரசு மருத்துவமனைக்கும் சென்று, பலியானோரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இறந்தோர் விபரம்
ஆனந்தகுமார், 40, அவரது மனைவி நதியா, 35, மகன் லோகுராம், 10, மகள் அக்சயா, 8, மாமியார் ருக்குமணி, 50. அருக்காணி, 45, அவரது மகள்கள் ஹரிசுதா, 17, மகாலட்சுமி, 14, அம்மா சின்னம்மாள், 70.சிவகாமி, 50, அவரது மகள்கள் வைதேகி, 22, நிவேதா, 18, மகன் ராமநாதன், 17.ஓவியம்மாள், 50, வீட்டில், அவரது உறவினர்கள் குருசாமி, 35, மங்கம்மாள், 65.திலகவதி, 38.

அதிகாரிகளே காரணம்!
கண்ணப்பன் லே - அவுட் பகுதியில் வசிக்கும் மக்கள் கூறியதாவது:மேட்டுப்பாளையம் நடூர் அருகே, 1991ல், கண்ணப்பன் லே - அவுட் போடப்பட்டு, வீட்டு மனைகள் விற்கப்பட்டன. மீதமுள்ள அரசு நிலத்தில், ஏழை மக்களுக்கு, பட்டா வழங்கப்பட்டது. அரசு திட்டத்தில், நகராட்சி வழங்கிய நிதியில், நாங்கள் வீடு கட்டினோம்.சிவசுப்பிரமணியத்திற்கு சொந்தமான, 15 அடி உயர சுற்றுச்சுவர், கருங்கற்களால் கட்டப்பட்டது; மிகவும் பழமையானது. இச்சுவர் இடிந்து, வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; எனவே, சுவரின் உயரத்தை குறைக்கக் கோரி, நகராட்சி, வருவாய்த் துறை அதிகாரிகளிடம், பல முறை மனு கொடுத்தோம்; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது, சுற்றுச்சுவர் இடிந்து, 17 பேர் இறந்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியம் தான், அவர்களின் மரணத்திற்கு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஏழு மணி நேரம் மீட்பு பணிசுற்றுச்சுவர் இடிந்து, வீடுகளின் மீது விழுந்த தகவல் கிடைத்தவுடன், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் களமிறங்கினர். காலை, 10:30 மணிக்குள், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என, ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன், தோண்டும் பணி நடந்தது. வேறு யாரும் இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மதியம், 12:30 மணிக்கு மீட்பு பணி முடிவுக்கு வந்தது.சாலை மறியல்'விபத்துக்கு காரணமான, சுற்றுச்சுவர் உரிமையாளர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்; இறந்தோர் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம், வீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்' என, நடூர் கண்ணப்பன் லே - அவுட் மக்கள், மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மறியலில் ஈடுபட்டவர்களை அழைத்து, கலெக்டர் ராஜாமணி, ஐ.ஜி., பெரியய்யா ஆகியோர் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

'புது வீட்டில் வாழவில்லையே'
மேட்டுப்பாளையம் அடுத்த ஆலாங்கொம்பைச் சேர்ந்தவர் குருசாமி, 45. இவர், ஆலாங்கொம்பில் வீடு கட்டி, இரு தினங்களுக்கு முன், கிரஹ பிரவேசம் செய்துள்ளார். 'புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறோம்' என, தகவல் சொல்ல, மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள, தன் உறவினர் சிவகாமி வீட்டிற்கு சென்றார். இரவு நேரம் ஆனதால், சிவகாமி வீட்டிலேயே உறங்கினார். கன மழையால் சுற்றுச்சுவர் இடிந்ததில், குருசாமியும் இறந்தார்.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த குருசாமியின் உறவினர்கள், 'புது வீடு கட்டியும், குடியிருக்க முடியாமல் போயிட்டியே...' என, கதறி அழுதனர்.இடிபாடு அகற்றுவதில் சிரமம்* சம்பவ இடத்தில் இடிபாடுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு, ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம், இடிபாடுகளை அகற்றினர்.

* எஸ்.பி. சுஜித்குமார் கூறுகையில், ''விபத்து தொடர்பாக, சிவசுப்ரமணியன் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த, 17 பேரின் சடலங்களும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

* விபத்திற்கு காரணமான சிவசுப்ரமணியனை, போலீசார் தேடி வருகின்றனர்.

* ஒரே பகுதியை சேர்ந்த, 17 பேர் உயிரிழந்ததால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், உறவினர்கள் நேற்று திரண்டனர். சம்பவ இடம் மற்றும் மருத்துவமனை முழுவதும், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சடலத்தை வாங்க மறுத்து, சாலையில் அமர்ந்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களுடன் போலீசார், சமரச பேச்சு நடத்தி கலைத்தனர்.

* முதல்வர் இ.பி.எஸ்., உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல, இன்று மேட்டுப்பாளையம் செல்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X