குட்கா ஊழலில் யார், யாருக்கு தொடர்பு?: பெண் எஸ்.பி.,யிடம் அமலாக்கத்துறை கிடுக்கி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குட்கா' ஊழலில் யார், யாருக்கு தொடர்பு?: பெண் எஸ்.பி.,யிடம் அமலாக்கத்துறை கிடுக்கி

Added : டிச 02, 2019

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக, வணிக குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி., விமலாவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அரசின் தடையை மீறி, சென்னையை சேர்ந்த, மாதவராவ் என்பவர், செங்குன்றம் அருகே, சட்ட விரோத, குட்கா தயாரிப்பு ஆலை மற்றும் குடோன் நடத்தினார். இதன் பங்குதாரர்களாக, உமாசங்கர் குப்தா, ஸ்ரீனிவசா ராவ் செயல்பட்டனர். இவர்களிடம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், 2016ல், வெளிச்சத்திற்கு வந்தது.விசாரணைஇது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மாதவராவ் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.இந்நிலையில், குட்கா ஊழலில் நடந்துள்ள சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். குட்கா ஊழல் நடந்த நேரத்தில், டி.ஜி.பி.,யாக பணியாற்றிய, டி.கே.ராஜேந்திரன் முதல், இன்ஸ்பெக்டர்கள் வரையிலான, 12க்கும் மேற்பட்டோருக்கு, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

இவர்களில், வணிக குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி., விமலா, நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில், ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது.

இது குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது: விமலா, 2015 டிச., 28ல் இருந்து, 2019 ஜூன், 28 வரை, சென்னை கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு, துணை கமிஷனராக பணியாற்றி உள்ளார். நுண்ணறிவு பிரிவுக்கு வரும் முன், மாதவரம் துணை கமிஷனராக பணியாற்றி உள்ளார்.சம்மன்இவர் தான், குட்கா ஆலை மற்றும் குடோனில்சோதனை நடத்திய போலீஸ் அதிகாரிகள் யார்; அங்கு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் மாதவ ராவிடம் லஞ்சம் வாங்கியபோலீஸ் அதிகாரிகள் குறித்து, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த, ஜார்ஜிடம் அறிக்கை தாக்கல் செய்தவர். அந்த அறிக்கையின் அடிப்படையில், விமலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர், பல முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X