பொது செய்தி

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை

Added : டிச 02, 2019
Advertisement

சென்னை: தென் மாவட்டங்களில், இன்று முதல், இரு நாட்கள் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை, நவம்பர், 28ல் தீவிரம் அடைந்து, தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில், கன மழை பெய்ததால், குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன; ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, மேட்டுப்பாளையத்தில், நேற்று, 18 செ.மீ., மழை பெய்தது. குன்னுாரில், 13 செ.மீ., மழை; மதுராந்தகம், சோழவரம், 10; செம்பரம்பாக்கம், கோடநாடு, 9; பெரியகுளம், செங்குன்றம், தாமரைப்பாக்கம், கொரட்டூர், 8 செ.மீ., மழை பதிவானது. வரும் நாட்களுக்கான வானிலை குறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:இலங்கை மற்றும் அதையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. தென் மேற்கு அரபிக்கடல் பகுதியிலும், காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது.

இதன் காரணமாக, தென் மாவட்டங்களில், இன்றும், நாளையும் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.நாகை முதல் திருநெல்வேலி வரையிலான கடலோர மாவட்டங்களில், பரவலாக, மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், மிக கன மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் கன மழையும் பெய்யலாம். கடலோர மாவட்டங்களில், சில இடங்களில், நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத்தீவு, மன்னார் வளைகுடா மற்றும் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், சூறைக் காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள், இன்றும், நாளையும், கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.

இயல்பை விட அதிகம்
தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை காலத்தில், இயல்பாக பெய்ய வேண்டிய மழையில், 11 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்., 1 முதல், நேற்று வரையிலும், சராசரியாக, 36 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 40 செ.மீ., மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X