மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பாரம்பரிய சிற்பங்கள் அமைந்துள்ள, வெவ்வேறு பகுதிகளுக்கு, சுற்றுலாப் பயணியர், 50 ரூபாய் கட்டணத்தில் செல்ல, 'ஏசி' மினி பஸ்சை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டுகளின், பல்லவ சிற்பங்கள், மாமல்லபுரத்தில் அமைந்து, சர்வதேச பாரம்பரிய கலை சுற்றுலா பகுதியாக விளங்குகிறது. பல்லவர்கள், இவ்வூர் பாறைகுன்றுகளில், கோவில் கட்டுமானம், சிற்பங்கள் செதுக்கி, புடைத்து, குடைந்து கலைச்சின்னங்கள் படைத்துள்ளனர்.இங்குள்ள கடற்கரை கற்கோவில், பாறைவெட்டு கற்களில், கட்டப் பட்டது. பஞ்ச பாண்டவர், ஐந்து ரதங்கள், ஒரே பாறை குன்றில், தனித்தனியே செதுக்கப்பட்டது.
அர்ச்சுனன் தபசு, பாறை விளிம்பில், நிலத்தின் கீழ், மேலாக, புடைக்கப்பட்டது. மகிஷாசுரமர்த்தினி, திருமூர்த்தி, வராகர் உள்ளிட்ட குடைரைகள், பாறை உட்புறம் குடையப்பட்டது.ஐ.நா., சபை, கல்வி, கலாசார பிரிவு, மாமல்லபுரம் சிற்பங்களை சர்வதேச கலாசார நினைவு சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. உள், வெளிநாட்டுப் பயணியர், சிற்பங்களை கண்டு களிக்கின்றனர்.
சென்னை, சுற்றுப்புற பகுதியினர், வார இறுதி, விடுமுறை நாட்களில் குவிகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங், இங்கு, முறைசாரா மாநாடாக, சந்தித்ததைத் தொடர்ந்து, பயணியர் அதிகரிக்கின்றனர். சிற்பங்கள், வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நிலையில், பாதசாரி பயணியர், நீண்டதுாரம் நடக்கின்றனர்.
குழந்தைகள், பெண்கள், முதியோர், நடக்க இயலாமல் அவதிப்படுகின்றனர். ஆட்டோ கட்டணம் அதிகம் என்பதால், அதை தவிர்க்கின்றனர்.அனைத்து சிற்ப பகுதிகளுக்கும், ஒரே கட்டணத்தில் செல்லும் வகையில், சுற்றுலா பஸ் இயக்க, பயணியர் எதிர்பார்த்தனர்.நம் நாளிதழிலும், செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், சுற்றுலா மேம்பாடு கருதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், 'ஏசி' மினி பஸ்சை, தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
பஸ், நாள்தோறும், காலை, 9:00 மணி - இரவு, 9:00 மணி வரை இயங்கும். மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதி, சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதியில் புறப்பட்டு, மாமல்லபுரத்திலிருந்து, 4 கி.மீ., தொலைவு, புலிக்குகை சிற்பம்; அங்கிருந்து, மாமல்லபுரம் சிற்ப பகுதிகள் செல்லும்.பஸ்சில், இருக்கைகளில், 18 பேர் உட்பட 25 பேர் பயணம் செய்யலாம். நபருக்கு, 50 ரூபாய் கட்டணம். எங்கும் ஏறி, எங்கும் இறங்கலாம். பஸ், இடைவேளை இன்றி, தொடர்ந்து இயங்கி, பயணியர், அவரவர் விருப்பத்திற்கேற்ப, எந்நேரத்திலும், பயணம் செய்யலாம்.செங்கல்பட்டு மாவட்ட துவக்க விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., இந்த பஸ்சை துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகத்தினர் கூறியதாவது:சோதனை முறையில், தற்போது, ஒரே பஸ்சை இயக்குகிறோம். வரவேற்பு இருந்தால், பஸ்கள் அதிகரிப்போம். அனைத்து சிற்ப பகுதிகளுக்கும், 'ஏசி' பஸ்சில் செல்ல, 50 ரூபாயாக, குறைந்த கட்டணமே வசூலிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.