சென்னை: ''தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில், அரிசி தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாட்டை சரி செய்யும்படி, முதல்வரிடம் வலியுறுத்தினேன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி கூறினார்.
தலைமை செயலகத்தில், நேற்று முதல்வரை சந்தித்து, விஜயதாரணி எம்.எல்.ஏ., பேசினார். பின், அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகளில், அரிசி தட்டுப்பாடு உள்ளது. இது குறித்து, முதல்வரிடம் பேசினேன். கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில், நவம்பரில் அனைத்து ரேஷன் கடைகளிலும், 2,000 கிலோ வரை, அரசி வினியோகிக்கப் படவில்லை. இந்த மாதம் வழங்க வேண்டிய அரிசியும் வந்து சேரவில்லை. மாநிலம் முழுவதும், இந்த பிரச்னை உள்ளது. ரேஷன் கடைகளுக்கு, அரிசி வினியோகத்தை, மத்திய உணவு கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
அரிசி தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என, முதல்வரிடம் வலியுறுத்தினேன். அவர் உடனடியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே நேரத்தில், தேர்தல் நடத்தப்பட வேண்டும். சட்டசபையை கூட்டி, நேரடி தேர்தலை, மறைமுக தேர்தலாக நடத்த, முடிவு செய்திருக்க வேண்டும். சட்டசபையை கூட்டாமலேயே, அறிவிப்பு வெளியிட்டிருப்பது தவறானது. இவ்வாறு, விஜயதாரணி கூறினார்.