மேலும் 4 மருத்துவ கல்லுாரிகள் முதல்வர் இ.பி.எஸ்., தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேலும் 4 மருத்துவ கல்லுாரிகள் முதல்வர் இ.பி.எஸ்., தகவல்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Share
 மேலும் 4 மருத்துவ கல்லுாரிகள்  முதல்வர் இ.பி.எஸ்., தகவல்

சென்னை: ''தமிழகத்தில், கூடுதலாக, நான்கு மருத்துவ கல்லுாரிகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது,'' என, முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.

தமிழக சுகாதார துறையில், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக, 5,224, நர்ஸ்கள், கிராமபுற சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட, மருத்துவ பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கட்டமைப்புஅவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், பணி ஆணை வழங்கினர். முன்னதாக, தமிழக தொலைதுார கண்ணியல் வலைதளம் மற்றும், 32 காணொளி கண் பரிசோதனை மையங்களை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்து, கண் பரிசோதனை மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:தேசிய அளவில், சுகாதார துறையில், தமிழகம் முன்னோடி மாநிலம். அரசு மருத்துவ கல்லுாரிகளில், எட்டு ஆண்டுகளில், 1,350 மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. வரலாற்று சாதனையாக, ஒரே ஆண்டில், ஒன்பது மருத்துவ கல்லுாரிகள் துவங்க, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், அரியலுார், கடலுார், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய, நான்கு மாவட்டங்களில், புதிதாக மருத்துவ கல்லுாரி அமைக்க, மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.அதற்கும் விரைவில், அனுமதி கிடைக்கும் என்ற, நம்பிக்கை உள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொடர்ந்து, 5வது ஆண்டாக, மத்திய அரசின் விருதை, தமிழகம் பெற்றுள்ளது.புதிதாக துவங்கப்பட உள்ள, ஒன்பது மருத்துவ கல்லுாரிகள் வாயிலாக, 8,000 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, முதல்வர் பேசினார்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வாயிலாக, 2012ல் இருந்து இதுவரை, 27 ஆயிரத்து, 436 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். உயர்ந்த சிந்தனைசெவிலியர்களின் பணி மகத்தானது. மக்களுக்காகவே நாம் என்ற, உயர்ந்த சிந்தனையோடு சேவை ஆற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகளை விட, அரசு மருத்துவமனைகளை மக்கள் விரும்பும் அளவிற்கு, செவிலியர்களின் பணி, சிறப்பாக அமைய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றனர்.நர்ஸ் ஆன திருநங்கை!நர்ஸ் பணியாணை பெற்றவர்களில், திருநங்கை அன்பு ரூபியும் ஒருவர். நாட்டிலேயே, முதல் திருநங்கை நர்ஸ் என்ற பெருமையை, அன்பு ரூபி பெற்றார்.

இதுகுறித்து, அன்பு ரூபி அளித்த பேட்டி:இந்தியாவின் முதல் திருநங்கை நர்ஸ் என்பதை, பெருமையாக கருதுகிறேன். இந்த பெருமையை, நான் அவ்வளவு சாதரணமாக பெறவில்லை. நுழைவு தேர்வு அனுமதி சீட்டில், மூன்றாம் பாலினத்தவர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசிதழில், ஆண், பெண் பாலினம் மட்டுமே இருந்தது. எனவே, பெண் பாலினத்தில் சேர்க்கப்பட்டேன். கடுமையான போட்டியில் தான், வெற்றி பெற்றேன். என் போன்றோர், வாழ்வில் வெற்றி பெற, மூன்றாம் பாலினத்தவருக்கு, அரசு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.***

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X