திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார், 101வது ஜெயந்தி விழாவில், புத்தக வெளியீட்டு விழா நடந்தது.
திருவண்ணாமலையில், பகவான் யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், நேற்று இரண்டாவது நாளாக, அவரது, 101வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை சிறப்பு யாகசாலை பூஜை செய்யப்பட்டு, பகவான் லிங்கத்திற்கு மஹா அபிஷேகம், பூஜை நடந்தது.தொடர்ந்து, 'தெய்வீக அனுபவங்கள்' மற்றும் 'ஆட்கொண்ட அண்ணல்' ஆகிய இரு புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது.தொடர்ந்து, பக்தர்கள் பஜனை, கிருத்திகா பரத்வாஜின் குரு மகிமை குறித்த சங்கீத உபன்யாசம், குரு அர்ச்சனா மகேஷின், 'குரு நந்தி தேவா' நாட்டிய நாடகம் நடந்தது.தொடர்ந்து, வெள்ளித்தேரில் பகவானின் உற்சவமூர்த்தி, ஆசிரம கிரிவலப் பாதையில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர், ஓய்வு பெற்ற நீதியரசர் அருணாசலம், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.