மாமல்லபுரம் : மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிற்ப சாலையில், வாகனங்களை அனுமதிக்க கோரி, பொதுமக்கள் நேற்று, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மாமல்லபுரத்தில் உள்ள மேற்கு ராஜ வீதியில், வாகனங்கள் செல்ல, பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.இத்தடத்தில் உள்ள, அர்ச்சுனன் தபசு, குடைவரை, வெண்ணெய் உருண்டை பாறைகளை, சுற்றுலா பயணியர், வாகன இடையூறு இல்லாமல், பாதுகாப்பாக பார்க்க, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.இதற்காக, கிருஷ்ணர் மண்டபம், வெண்ணெய் உருண்டை பாறை நுழைவாயில், பாடசாலை தெரு பகுதிகளிலிருந்து, வாகனங்கள் நுழையாமல் தடுக்க, பேரூராட்சி நிர்வாகம், நிரந்தர தடுப்பும் அமைத்தது. இந்நிலையில், நுழைவாயில் பகுதிகளில், நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் சுழற்கதவு அமைக்கப்பட்டது.
இதனால், இப்பகுதியினர், போலீசாருடன் வாதிட்டு, பின், பேரூராட்சி அலுவலக்தை முற்றுகையிட்டனர்.அங்கு, 'பள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும், மேற்கு ராஜ வீதி சாலையை, மறிக்க கூடாது. இங்கு மறித்து, கிழக்கு ராஜ வீதியில் மட்டுமே, அனைத்து வாகனங்களும் சென்றால், விபத்து அதிகரிக்கும்.'இதனால், மேற்கு ராஜ வீதியில், இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்' என, செயல் அலுவலர், லதாவிடம் வலியுறுத்தினர். இதற்கு, செயல் அலுவலர், ''மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, அவரது உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அவர் உறுதியளித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.