செங்கல்பட்டு: 'ஈசூர் - வல்லிபுரம் தடுப்பணை நிரம்பி, உபரி நீர் வெளியேறி செல்வதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம்' என, பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளது.
மதுராந்தகம் அடுத்த, ஈசூர் - வல்லிபுரம் இடையே, பொதுப்பணித் துறை சார்பில், பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது.சில தினங்களாக பெய்த மழையால், இந்த தடுப்பணை நிரம்பி, தண்ணீர் வழிகிறது. தடுப்பணையிலிருந்து, 5 கி.மீட்டருக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.இதனால், பூதுார், ஈசூர் - வல்லிபுரம் உட்பட, 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில், பொதுப்பணித் துறை விடுத்துள்ள எச்சரிக்கை:பாலாற்றில், இரு கரைகளையொட்டி, தண்ணீர் செல்கிறது. இதனால், பாலாற்றங்கரை அருகில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.பாலாற்றில், பல ஆண்டுகளுக்கு முன், மணல் குவாரிகள் நடந்தன. இங்கு, ஆங்காங்கே பள்ளம் இருக்கும் என்பதால், தண்ணீர் அதிகம் தேங்கி நிற்கும். எனவே, யாரும் பாலாற்றில் குளிக்க வேண்டாம்.இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.