திருவள்ளூர் : வட கிழக்கு பருவ மழை வலுத்துள்ள நிலையில், சோழவரத்தில் நேற்று காலை நிலவரப்படி, 9.8 செ.மீட்டர் மழை பதிவாகியது.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு வாரமாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொடர் மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முதல், இரவு வரை பலத்த மழை பெய்தது. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் வரை, மழையில்லாத சூழலில், மதியம் திடீரென மழை பெய்யத் துவங்கியது.
இதனால், திருவள்ளூர் ஜே.என்.சாலை, ராஜாஜிபுரம், பூங்கா நகர், காக்களூர், கடம்பத்துார், வெள்ளவேடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.நேற்று காலை நிலவரப்படி, சோழவரத்தில், 9.8 செ.மீ., மழை பதிவாகியது.