திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், கன மழை காரணமாக நிரம்பி வருகின்றன. எனவே, யாரும் ஆபத்தான முறையில் குளிக்கவோ, 'செல்பி' எடுக்கவோ வேண்டாம் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், வட கிழக்கு பருவ மழை காரணமாக, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், கொற்றலை, ஆரணி மற்றும் கூவம் ஆறுகளிலும், நீர் வரத்து கணிசமாக உள்ளது.குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில் உருவாகி, பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு மற்றும் கேசவராஜகுப்பத்தில் இருந்து, கடம்பத்துார், விடையூர் வழியாக, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் கொற்றை ஆற்றிலும், தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், கலெக்டர் மகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'கன மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. எனவே, பொதுமக்கள், குழந்தைகள் யாரும், ஏரி, ஆறு மற்றும் குளங்களில் குளிக்கவோ, பார்வையிடவோ, விளையாடவோ, துணி துவைக்கவோ, 'செல்பி' எடுக்கவோ கூடாது' என, கூறியுள்ளார்.