திருவள்ளூர் : உள்ளாட்சி தேர்தலால், நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெற, புகார் பெட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று, மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பொதுமக்கள், பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளித்துச் செல்வது வழக்கம்.இதன்படி, வழக்கம் போல் நேற்று காலை, மனுக்கள் வழங்க, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில், காலை, 10:15 மணியளவில், மாநில தேர்தல் ஆணையரால், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. உடனடியாக, தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது.இதையடுத்து, மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மக்களின் மனுக்களை பெறுவதற்காக, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், புகார் பெட்டியும் அமைக்கப்பட்டது.அதிகாரிகளின் அறுவுறுத்தலின் பேரில், பொதுமக்கள், தங்களது மனுக்களை புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர்.