புதுடில்லி: ''முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தான், நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பரில், அவசர சட்டம் மூலம், நிறுவனங்களுக்கான வரி விகிதம், 30லிருந்து, 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன், தயாரிப்பு துறையில், புதிய நிறுவனங்களுக்கு, வரி, 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக, வரிச் சட்டங்கள் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
முன்னதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:வளரும் நாடுகள் மற்றும் அண்டை நாடுகள் பலவும். அன்னிய முதலீடுகளை ஈர்க்க, வரி விகிதத்தை குறைத்துள்ளன. அதை பின்பற்றி, முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிறுவனங்கள் வரி குறைக்கப்பட்டது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அன்னிய நிறுவனங்கள், முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன. அத்தகைய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வரி குறைப்பு அவசியம் என, அரசு கருதி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், சாப்ட்வேர் உருவாக்கம், பளிங்கு கற்களை, 'ஸ்லாப்' ஆக மாற்றுவது, 'காஸ்' சிலிண்டர் நிரப்புதல், புத்தக அச்சடிப்பு, திரைப்படம் ஆகியவை, புதிய தயாரிப்புகளாக கருதி, வரிச் சலுகை பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
விவாதத்தில், காங்., - எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதாவது:நிறுவனங்கள் வரி குறைப்பால், 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். இதை, அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை விளக்க வேண்டும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, மத்திய அரசு, மன்மோகன் சிங்கிடம் ஆலோசனை கேட்கலாம். நிதியமைச்சரை நான் மதிக்கிறேன். அவரின் இயலாமையை காணும்போது, சில சமயம், நிர்மலா என்பதற்கு பதிலாக, 'நிர்பலா' என, அதாவது வலிமையற்றவர் என அழைக்கலாமா என்று கூட எண்ணுகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.