வீட்டில் 5 சவரன் திருட்டு
திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 61; தனியார் நிறுவன காவலாளி. இரவு பணி முடிந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 5 சவரன் நகையை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வியாபாரிகளுக்கு, 'காப்பு!'
மாதவரம்: மாதவரம் போலீசார், நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோயம்பேடில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கு சென்ற ஆட்டோவில், கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. இதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரியா லட்சுமி, 22, பாடி, ராஜா தெருவைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுனர் சம்சுதீன், 36, ஆகியோர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
அண்ணா நகர்: அண்ணாநகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர், ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்க முயன்றபோது, இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கினர். விசாரணையில், ஐ.சி.எப்.,பைச் சேர்ந்தபாலு, 30, மகாராஜா, 39, என தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து, 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.
கோட்டூர்புரம்: கோட்டூர்புரத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள், கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், திரிபுராவைச் சேர்ந்த குர்ஷித், 28, பிலால் உசேன், 30, இமான் உசேன், 30, அன்வர் உசேன், 21, ஆகிய நான்கு பேரும், திருவல்லிக்கேணி, பூக்கடையில் தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்களை நேற்று கைது செய்த, கோட்டூர்புரம் போலீசார், 16 கிலோ கஞ்சா, 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.மேற்கண்ட கஞ்சா வியாபாரிகள் அனைவரும், பள்ளி, கல்லுாரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா வியாபாரித்தில் ஈடுபட்டுள்ளனர்.
பூட்டை உடைத்து கொள்ளை
திருநின்றவூர்: ஆவடி அடுத்த திருநின்றவூர், ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 25. அதே பகுதியில், மொபைல் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, கடை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, 35 ஆயிரம் ரூபாய், மடிக்கணினி, மொபைல் போன்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தன. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது பாட்டில் விற்றோருக்கு, 'கம்பி!'
அமைந்தகரை: அமைந்தகரை, புல்லா அவென்யூ சாலையில் உள்ள, 'டாஸ்மாக்' பாரில், சட்டவிரோதமாக மது விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரித்த அமைந்தகரை போலீசார், மது விற்பனையில் ஈடுபட்ட, ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவேகானந்தன், 30, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 25, ஆகியோரை கைது செய்தனர்.
40 சவரன் நகை, 'ஆட்டை'
கோட்டூர்புரம்: ஐ.ஐ.டி.,யில், கண்காணிப்பாளராக பணிபுரிபவர், அர்ஜுனன், 57. இவர், ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி, பணிக்கு சென்றார். அப்போது, மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்து, 40 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் 1 லட்சம் ரூபாயை திருடி சென்றனர். கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணை தாக்கியவருக்கு, '128 நாள்'
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, வாசுகி நகரைச் சேர்ந்தவர் மாரி, 37. இவர் மீது, புளியந்தோப்பு, பேசின்பாலம் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், 'எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன்' என, புளியந்தோப்பு துணை கமிஷனரிடம், அக்டோபரில், மாரி உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.ஆனால், அதை மீறி, அடுத்த சில தினங்களில், பிரியா என்ற பெண்ணை தாக்கிய வழக்கில் சிக்கினார். இதையடுத்து, அவர், 128 நாட்களுக்கு, ஜாமினில் வெளிவர முடியாத வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்.
மரக்கிளை விழுந்து பெண் காயம்
திருமங்கலம்: அண்ணா நகர், மேற்கு டபிள்யூ பிளாக்கைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர், கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காமாட்சி, 35. நேற்று, அண்ணா நகர் மேற்கு, மில்லினியம் பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, சாலையோரம் நின்ற மரத்தின் கிளை முறிந்து, காமாட்சியின் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.