விமானத்தில் கோளாறு பயணியர் கடும் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கோளாறு பயணியர் கடும் அவதி

Added : டிச 02, 2019

சென்னை: மும்பை சென்ற விமானத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், எட்டு மணிநேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால், பயணியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சென்னையில் இருந்து, மும்பைக்கு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, மும்பை செல்லும், 'கோ - ஏர்' விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் செல்ல, 213 பயணியர், அதிகாலை, 3:30 மணிக்கே, விமான நிலையம் வந்து காத்திருந்தனர்.ஆனால், அதிகாலை, 5:00 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில், 'சிறிய அளவிலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், காலை, 7:00 மணிக்கு புறப்பட்டு செல்லும்' என, விமான நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

விமான நிறுவனத்தால் குறிப்பிடப்பட்ட நேரத்திலும், பயணியருக்கு, 'போர்டிங் பாஸ்' வழங்கப்படவில்லை. இதனால் சில பயணியர், விமான நிறுவனத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பயணியரை சமாதானப்படுத்திய விமான நிறுவன அதிகாரிகள், அந்த விமானம், நேற்று காலை, 10:00 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என, அறிவித்தனர். பயணியருக்கு, 9:00 மணியளவில், 'போர்டிங் பாஸ்' வழங்கப்பட்டு, அனைவரும், 9:30 மணியளவில் விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

காலை, 11:00 மணியாகியும், அந்த விமானம் புறப்படாததால், மீண்டும் பயணியர், விமான நிறுவனத்தாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின், அந்த விமானம், எட்டு மணி நேரத்திற்கு மேல் தாமதத்துடன், பிற்பகல், 1:19 மணிக்கு மும்பை புறப்பட்டு சென்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X