சென்னை : தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின், ஒட்டுமொத்த நீர் இருப்பு,4 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளுக்கும், நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு வினாடிக்கு, 2,925 கன அடி நீர்வரத்து கிடைத்தது. ஏரியின்நீர் கையிருப்பு, 1.22 டி.எம்.சி.,யாக அதிகரித்தது. சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு, 440 கன அடி நீர்வரத்து கிடைத்தது.
ஏரியின் நீர்இருப்பு, 0.13 டி.எம்.சி.,யாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு, 2,161 கன அடி நீர்வரத்து கிடைத்தது. ஏரியின் நீர்இருப்பு, 1.81 டி.எம்.சி.,யாகவும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு, 1,923 கனஅடி நீர்வரத்து கிடைத்ததால், நீர் இருப்பு, 0.91 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்துள்ளது. நான்கு ஏரிகளிலும், ஒட்டுமொத்தமாக நீர் இருப்பு, 4.09 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. சாய்கங்கை கால்வாயில், தமிழக எல்லையை கடந்து வினாடிக்கு, 543 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கால்வாயின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 4.7 செ.மீ., மழை பதிவானதால், கூடுதல் நீர்வரத்து கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.மழை தொடரும் பட்சத்தில், ஏரிகளின் நீர்மட்டம், இன்னும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.