திருப்பூர்: பெருமாநல்லுார் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு சுவரில், கார் மோதிய விபத்தில், தந்தை, மகன் உட்பட மூவர் பலியாயினர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், அசோகபுரத்தைச் சேர்ந்தவர், மோகன், 50. இவர், தன் மனைவி கவிதா, 42, மகன் பரத், 24, தம்பி லோகநாதன், 47, லோகநாதனின் மகன் அமர்நாத், 11, ஆகியோருடன், கோவை மாவட்டம், சூலுாரில் நேற்று நடந்த உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார். காரை, லோகநாதன் ஓட்டினார். பின், அங்கிருந்து, ஈரோடுக்கு காரில் புறப்பட்டனர். காலை, 10:00 மணியளவில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் அடுத்த வலசுப்பாளையம் பிரிவு அருகே, வேகமாக வந்த கார், ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து, தேசிய நெடுஞ்சாலையில், பக்கவாட்டுச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில், பரத், மோகன், லோகநாதன் ஆகியோர் உயிரிழந்தனர். கவிதா, அமர்நாத் ஆகியோர், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.பலியான சகோதரர்கள் மோகனும், லோகநாதனும், ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மருந்துக்கடை நடத்தி வந்தனர். பலியான பரத், பொறியியல் பட்டதாரி.