ரூ.6.20 கோடியில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.6.20 கோடியில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களில் 'எஸ்கலேட்டர்' வசதி

Added : டிச 02, 2019

வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் பாதையில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களில், 6.20 கோடி ரூபாய் செலவில், 'எஸ்கலேட்டர்'கள் நிறுவப்படுகின்றன.

வேளச்சேரி - பரங்கிமலை இடையே, மேம்பால ரயில் பாதை பணி நடக்கிறது.இத்திட்டத்தில், ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே, பாதைக்கான நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு வழங்குவதில், பிரச்னை ஏற்படாமல், நில உரிமையாளர்களுக்கும் வழங்க வேண்டிய இழப்பீடு, தாமதமின்றி வழங்கப்பட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இப்பாதை பணி இனியும் தாமதிக்காமல் விரைவாக முடிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இப்பாதையில், வேளச்சேரி - பரங்கிமலை இடையே, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலைய கட்டுமான பணிகள் முடிந்து, பயணியருக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. படிக்கட்டுகள், பிளாட்பார பணிகள், டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்த இரண்டு நிலையங்களிலும், 6.20 கோடி ரூபாய் செலவில், எஸ்கலேட்டர்கள் எனும் நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட உள்ளன.

இது குறித்து, கட்டுமான பணி அதிகாரி கூறியதாவது: ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே, 500 மீட்டர் பாதை பணி, இன்னும், 15 மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும் என, எதிர்பார்ப்பு உள்ளது.வேளச்சேரி - ஆதம்பாக்கம் இடையே, மீதமுள்ள கட்டுமான பணிகள், 2020 ஜூன் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பாதையில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் நிலையங்களில், 6.20 கோடி ரூபாய் செலவில், எஸ்கலேட்டர்கள் நிறுவப்பட உள்ளன. இப்பணிகள் ஒன்பது மாதங்களில் முடிக்கப்படும். நிலம் கையகப்படுத்துவதில் நில உரிமையாளர்கள், அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைகள், விரைவாக முடியும் என, எதிர்பார்க்கிறோம்.ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே, 2020 ஜனவரியில் கட்டுமான பணி துவங்கினால், 2021 ஜூன் மாதத்திற்குள் முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்கப்படும். தென் சென்னை ஏரியாவில் வாகன போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும்.இவ்வாறு, அதிகாரி கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X