மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகள் ; இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகள் ; இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

Added : டிச 02, 2019
Share
மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகள் ;  இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்.

'வலி தந்த வலிமையால் வாழ்வுப் பயணத்திற்குப் புதியவழி கண்டவர்கள் நாங்கள். நரம்புகளிலும் நம்பிக்கையுள்ளதால் குறையொன்றும் இல்லை' என நெஞ்சுறுதியோடு தடைகளை உடைத்து ஒவ்வொரு துறைகளையும் மாற்றிக்காட்டிய மாற்றுத்திறனாளிகளை நாம் போற்றிப் புகழவேண்டாமா.

ஊக்கத்தால் தாக்கமேற்படுத்தியவர்
கண்களிருந்தும் மற்றவர்கள் துன்பங்களைப் பாராதவர்களுக்கு மத்தியிலே கழுத்துக்குக் கீழேஉறுப்புகள் செயல்படாதபோதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நுாற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் திறன்களை ஊக்கப்படுத்தி, அவர்களைக் காக்கும் அமைப்பான அமர்சேவா சங்கத்தைத் தென்காசிக்கு அருகில் உள்ள ஆய்க்குடியில் நடத்தி நாடிவந்தோருக்குத் தேடிச்சென்று உதவிடும் ராமகிருஷ்ணன் வாழ்ந்துகாட்டியல்லாமல் வேறுயார்?

முன்னேறுபவர்கள் ஒருநாளும் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதில்லை!
அவர்கள் மூச்சுப்பிடித்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். தடுமாறி விழுந்தவர்கள் களையும், தடம்மாறிச் சென்றவர்களையும் நேர்வழிப்படுத்தும் பேராசிரியர்களாக உலகப்புகழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங்.இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்று எல்லோரையும் போல் இயல்பாய் வாழ்ந்துகொண்டிருந்தபோது 21 வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டுக் கைகால்கள் செயலிழந்து வாய்பேசமுடியா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கணினியைப் பயன்படுத்தி அவர் சொல்வதை மாணவர்கள் புரிந்துகொள்ளுமளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் குறையை அவர் துணிச்சலாக எதிர்கொண்டார். உடல்குறையை ஒரு பொருட்டாக எண்ணாமல் கடும்முயற்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
மாற்றுத்திறன்
உலகஅளவில் பேசப்படும் 'காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம்' எனும் நுாலை எழுதி பாராட்டைப் பெற்றார். இயற்பியல் ஆய்வுகளுக்காக உலகின் பலநாடுகளுக்குப் பயணிக்க அவருக்கென்று வடிவமைக்கப்பட்ட விமானத்தில் பயணித்து ஆய்வுச் சொற்பொழிவுகளை வழங்கினார். என் வாழ்வின் இலக்கு விண்வெளிப் பயணம் மேற்கொண்டு நிலவைச் சுற்றிவருவதுதான் என்று மிகத்துணிச்சலாகக் கூறினார். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைத்து 19 ஆய்வுநுால்களை உருவாக்கினார். பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கிங் தேனீயைப் போல் உலவிய அறிவியல் விஞ்ஞானி!உலகின் சிறந்த இசைமேதையான லுடுவிக் வான் பேத்தோவன், பியானோ இசைக்கலைஞராகத் தொடக்கத்தில் அறியப்பட்டார். புகழ்பெற்ற இசையமைப்பாளராக அவர் உருவான காலத்தில் 26வது வயதில் செவித்திறனை முற்றிலும் இழந்தார். இழந்த செவித்திறன் குறித்து அவர் வருந்தினார், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட வந்தது, அவரது நண்பர்கள் தந்த ஊக்கத்தின் உதவியால் அதிலிருந்து மீண்டு இசையில் மூழ்கினார். உலகப் புகழ்பெற்ற நைன்த் சிம்பனி, வயலின் நோட்ஸ்களை உருவாக்கினார். அவரது இறுதிஊர்வலத்தில் இருபதாயிரம் பேர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். ஒருதிறன் குறைந்தால் மாற்றுத் திறன் உள்ளுக்குள்ளிருந்து பீறிட்டெழுந்தே தீரும் என்பதற்குச் சான்று பேத்தோவன்.

நம்பிக்கையால் சிகரம் எட்டியவர்
கைப்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்த அருணிமா சின்கா ஓடும் ரயிலில் இருந்து திருடர்களால் துாக்கிவீசப்பட்டு இடதுகாலைத் தொடர்வண்டியின் சக்கரங்களில் இழந்தார். கால்களை இழந்தாலும் நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. மனம் தளராமல் ஒற்றைக் காலோடு மத்தியப் பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலரானார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியேதீருவேன்! என்று கடும் முயற்சி செய்து 2013ல் அருணிமா சின்கா எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்து இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். எவரெஸ்ட் சிகரத்தில் கால்வைத்த இந்தியாவின் முதல் மாற்றுத்திறன் சாதனையாளர் என்ற பெயர் பெற்றார்.
தடையைத் தாண்டியவர்கள்
சிறுவயதில் வந்த மர்மக் காய்ச்சலால் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் ஹெல்லர் தடையை வென்று சைகை மொழியைக் கற்றுக்கொண்டு பல நுால்களை எழுதிய எழுத்தாளராக நாற்பது நாடுகளுக்குப் பயணித்த சொற்பொழிவாளராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.புகழ்பெற்ற நடனக்கலைஞரான சுதா சந்திரன், 17 வயதில் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் செயற்கைக்கால் மாட்டி நடக்கத் தொடங்கினார். முயற்சியாலும் பயிற்சியாலும் மீண்டும் நடனமாடத் தொடங்கினார். மாற்றுத்திறன் பெற்ற தடகள வீரரான மாரியப்பன் தங்கவேலு, உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உயரம் தாண்டுதலில் டி- 42 பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

இளமையில் கண்பார்வை இழந்த கவிஞர் ஜான்மில்டன் இழந்த சொர்க்கம், மீண்ட சொர்க்கம் எனும் புகழ் பெற்ற படைப்புகளை இயற்றினார். கற்கும் திறனற்றவர் என்று பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனை ஊக்கப்படுத்தி அவருக்குக் கல்வியைக் கற்றுத்தந்து ஆய்வாளராக்கியதில் அவர் தாய் நான்சி எடிசனுக்குப் பங்குண்டு. மூளைவளர்ச்சித் திறனற்றவர் என்று முத்திரை குத்தப்பட்ட எடிசன், தன் மாற்றுத்திறனால் ஆயிரமாயிரம் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.

யாரால் முடியும்
தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸ்சாண்டர் கிரகாம்பெல் சிறுவயதில் கற்பதில் ஆர்வமற்றவராகவே இருந்தார். அவரது தாயாரும், அவரது துணைவியாரும் மாற்றுத் திறனாளிகள், அவர்கள் தந்த ஊக்கத்தால் உலகப்புகழ் பெற்ற ஆய்வறிஞராகத் திகழ்ந்தார். 'நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும்?'இப்போது முடியாதென்றால் எப்போது முடியும்?' எனும் தன்னம்பிக்கை வாசகம்தான் அணுகுண்டுத் தாக்குதல்களால் சின்னா பின்னமான ஜப்பான் நாட்டை உயர்த்திய வாசகம்.

மாற்றுத்திறனாளிகளின் சாதனைகளை ஊக்கப்படுத்துவதும் அவர்கள் தளரும்போது தட்டிக் கொடுப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. விழுவதன் வலியை அழுவதன் மூலமாக அல்ல, எழுவதன்மூலமாகத்தான் நாம் காட்டவேண்டும்.- -பேராசிரியர் சவுந்தர மகாதேவன் தமிழ்த்துறைத் தலைவர்சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லுாரிதிருநெல்வேலி. 99521 40275

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X