ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கொட்டிய மழையால் வழுதுார் உட்பட 5 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அரை கி.மீ.,க்கு 4 அடி உயரத்திற்கு ரோட்டில் நீர் தேங்கி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 நாட்களாக மழை பெய்கிறது. ராமநாதபுரம் தாலுகாவில் நவ.30ல் 100 மி.மீ., டிச.1ல் 86 மி.மீ., மழை கொட்டியது. இதனால் நீர் நிலைகள் நிறைந்து வருகின்றன. ராமநாதபுரம் அருகே வழுதுார் ஊரணி நிறைந்து சாலையின் இரு புறமும் நீர் வெளியேறுகிறது. 4 அடி உயரத்திற்கு நீர் செல்வதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்குகாட்டூர், அல்லியார் கடை, முத்துப்பேட்டை, பெரியபட்டினம், வழுதுார் பகுதியினர் திருப்புல்லாணி, உச்சிப்புளி வழி சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.
அப்பகுதி வி.ஏ.ஓ., ஜெநாதபூபதி கூறுகையில், 'சாலையில் நீர் வரத்து இருப்பதால் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வடியும் வரை போக்குவரத்து துண்டிக்கப்படும்' என்றார்.
5000 ஏக்கர் நெற்பயிர் பாழ்
மாவட்டத்தில் கன மழை பெய்வதால் உச்சிப்புளி பகுதியில் 5,000 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின.மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சிப்புளி, அழகன்குளம், அகஸ்தியர் கூட்டம், புது ரோடு, இரட்டையூரணி, தாமரைக்குளம், திருப்புல்லாணி பகுதிகளில் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. வடிகால் இல்லாததால் இருந்து தண்ணீரை வடிக்க முடியவில்லை.
விவசாயிகள் கூறுகையில், 'நான்கு ஆண்டுகளாக மழையின்றி தவித்தோம். தற்போது வயல்களில் மழை நீர் தேங்கி உள்ளது. ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்' என்றனர்