சென்னை : சென்னை, பூந்தமல்லியில் இருந்து, தி.நகருக்கு இயக்கப்பட்டு வந்த, 49ஏ வழித்தட பஸ்சை, எம்.டி.சி., நிர்வாகம் திடீரென நிறுத்தி உள்ளதால், பயணியர் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னை, பூந்தமல்லியில் இருந்து, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், ரெட்டேரி, போரூர், காரம்பாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், வடபழனி, அசோக் பில்லர், மேற்கு மாம்பலம் வழியாக, தி.நகர் வரை இயக்கப்பட்டு வந்த, 49 ஏ வழித்தட பஸ், நான்கு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், பூந்தமல்லியில் இருந்து, இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், தி.நகருக்கு வேலைக்கு சென்று வந்த மகளிர் உள்ளிட்டோருக்கு, பெருத்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், அய்யப்பன்தாங்கலிளிருந்து இயக்கப்பட்டு வந்த, 11எச் வழித்தட பஸ்சும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பூந்தமல்லியில் இருந்து, தி.நகர் வரை ஒரே பஸ்சில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும், அதே பஸ்சை பழைய வழித்தடத்தில் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.