சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இசைத் துறையை டி.ஆர்.பி., கவனிக்குமா?

Added : டிச 03, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
என்.சுப்பையா, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: எம்.எஸ்சி., - எம்.பிஎல்., கல்வி பயின்று, அரசு வேலைக்காக பல்லாயிரம் பேர் காத்திருக்கின்றனர். இவர்களில், தமிழக அரசு உயர் கல்வித் துறை தேர்வாணையம் வாயிலாக, சிலர் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.பல ஆண்டுகளுக்கு முன், அப்போதைய கல்வி முறை வரையறையில் படித்தோரும், கல்வி முறை நவீனப்படுத்திய படிப்பிலும், கற்றவர்கள் பலர்
இசைத் துறையை டி.ஆர்.பி., கவனிக்குமா?

என்.சுப்பையா, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: எம்.எஸ்சி., - எம்.பிஎல்., கல்வி பயின்று, அரசு வேலைக்காக பல்லாயிரம் பேர் காத்திருக்கின்றனர். இவர்களில், தமிழக அரசு உயர் கல்வித் துறை தேர்வாணையம் வாயிலாக, சிலர் மட்டுமே நியமிக்கப்பட உள்ளனர்.பல ஆண்டுகளுக்கு முன், அப்போதைய கல்வி முறை வரையறையில் படித்தோரும், கல்வி முறை நவீனப்படுத்திய படிப்பிலும், கற்றவர்கள் பலர் இருக்கின்றனர்.

டி.ஆர்.பி., உயர் கல்வித் துறை சார்பில், தமிழக கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்து, 2,340 பேரை பணிக்கு எடுக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது. அதற்கு, பி.ஜி., டிகிரி முடித்து, பல வகைப்பட்ட பாடங்களில் தேர்வாகி, பிஎச்.டி., செட், நெட் தகுதி உடையோராக இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎச்.டி., படிப்போர், ஒரு குறிப்பிட்ட பாடத்தில் டில் ஒரு பகுதியை மட்டும், கைடு துணையுடன் படித்து, முனைவர் பட்டம் பெற்றிருப்பர்.

'நீட்' தேர்வில், அகில இந்திய அளவில், எல்லா மாநில பல்கலை பாடத் திட்டத்தையும் ஒருங்கிணைத்து, சான்று வழங்குவர். 'செட்' தேர்வில், அந்தந்த மாநில கல்வி செயல்பாட்டு திட்டத்தை, ஆரம்ப கல்வி முதல், நடப்பு நவீன கல்வி அனைத்தையும், தமிழக பல்கலை கல்வியையும் இணைத்து, தேர்வு அமையும்; இதுவே தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும். பிஎச்.டி., முடித்தோரில், ஒருவர் கூட, 'செட்' தேர்வில் வெற்றி பெறவில்லை. இசைத் துறையில் வெறும், இரண்டு உதவி பேராசிரியர் இடங்கள் மட்டுமே, பூர்த்தி செய்யப்பட உள்ளன. அதில், ஒன்று எஸ்.சி., - அருந்ததியர், மற்றொன்று பொதுப் பட்டியலில் ஒருவர். அதேபோல், பிஎச்.டி., முடிக்காதோரில் சிலர், 'செட்' தேர்வில் தேர்வாகி உள்ளனர். 99 சதவீதம் 'நெட்' தேர்வில், சில துறை தவிர, யாரும் வெற்றி பெறவில்லை.

உதாரணமாக, இசைத் துறையில், கவின் கலையில், 'செட்' தேர்வில் வெற்றி பெற்றோர் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலே உள்ளனர். ஏற்கனவே கல்லுாரி பேராசிரியராகப் பணியாற்றுவோர் கூட, 'செட்' தேர்வில் வெற்றி பெற இயலவில்லை. 'செட்' தேர்வில், மதிப்பெண் அடிப்படையில், இசைத் துறையில் தேர்வு செய்வதே சாலச் சிறந்தது அல்லது பொதுவான எழுத்து தேர்வு வைத்தும் கூட, முடிவு செய்யலாம்; இதனால் முறைகேடை தவிர்க்க முடியும்!

***


அதிகார பதவிகளின் மாண்பை காப்போம்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அன்று, 'மாஜி' முதல்வர் அண்ணாதுரை, 'ஆட்டிற்கு தாடியும், நாட்டிற்கு கவர்னரும் தேவையில்லை' என்றார். அதை, நிரூபிக்கும் வகையில், மஹாராஷ்டிராவின் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி நடந்து கொண்டார். மத்தியில் ஆளும், பா.ஜ., தலையாட்டி பொம்மையாக செயல்பட்டு, அவசர கோலத்தில், நள்ளிரவில் நடந்த திரைமறைவு, அரசியல் வியாபாரத்தை நடத்தி முடிக்க காரணமாக இருந்தவர். இரவோடு இரவாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திடம் அனுமதி கேட்டு, அதிகாலையில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார்.

பா.ஜ., தலைமையில், மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க உதவியுள்ளார், கவர்னர். எந்த அளவிற்கு, ஒரு மாநில கவர்னரும், முதல் குடிமகனும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விட்டனர். பல மாநிலங்களின் சட்டவிரோத ஆட்சி கலைப்புகளுக்கு, கவர்னர்கள் மூலக்காரணம் ஆகி விடுகின்றனர். அதற்கு உதாரணம், ஒவ்வொருவரும் வெட்கி தலைகுனிவு அடையும் வகையில், மஹாராஷ்டிராவின் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி செய்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போன்ற நேர்மையாளர்கள் அமர்ந்து, நிர்வாகம் செய்ய வேண்டிய பதவிகளை, அரசியல் சாயம் பூசியோர் பொறுப்பேற்று இருப்பது, களங்கங்கள் ஏற்பட தானே செய்யும். எதற்காக கவர்னர் பதவியும், ஜனாதிபதி பதவியும், அரசியல் சாசனத்தின் படி அமர்த்தப்பட்டதோ, அதை, அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில், மனசாட்சி உடன் நேர்மையான வழியில் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், இன்று, மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஜனநாயக படுகொலை அரங்கேறி இருக்காது.

நல்ல வேளை... உச்ச நீதிமன்றம் தலையிட்டு, மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாடே போற்றும் வகையில், நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு வழியாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகி உள்ளார். அரசியல் சாயம் இல்லாத அறிஞர்களுக்கும், சான்றோர்களுக்கும், ஜனாதிபதி மற்றும் கவர்னர் பதவிகள் கொடுத்து, அந்த பதவிகளின் மாண்பை காப்போம்!

***


இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது!

அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை, வேளச்சேரியில் வசிக்கும் ஒரு தம்பதி, 2018ல், 'எங்கள் குழந்தையை காணவில்லை' என, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின், காவல் நிலையம் அருகே இருந்த, ஏரியிலிருந்து அழுகிய நிலையில், ஒரு குழந்தை யின் உடலை போலீசார் மீட்டெடுத்தனர். பெற்றோரிடம் நீண்ட விசாரணை, நடத்தப்பட்டது. அந்த குழந்தையை கொலை செய்து வீசி விட்டுச் சென்றவர், அவர் தாய் தான் என தெரிந்தபோது, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த தாயை விசாரித்தபோது, அவர் கொலை செய்ததற்கு கூறிய காரணம், மிகவும் வேதனையை கொடுத்ததாக இருந்தது. 'என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால், என் மேனி அழகு குன்றி விடும்; அதனால், பால் கொடுக்க இயலாததால், குழந்தையை கொன்று விட்டேன்' என அவர், ஒப்புக்கொண்டார். தவம் இருந்து, பெற்ற பிள்ளையை, கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விட்டாரே... வீட்டில் பொருளாதார பிரச்னையாக இருக்கலாம் அல்லது வேறு வகை பிரச்னைகளாக இருந்தாலும், தான் பெற்ற குழந்தையை கொலை செய்வதற்கு, எந்த தாய்க்கும் உரிமை கிடையாது.

சில பேர், குழந்தையை வளர்க்கவே முடியாத நிலை ஏற்படும் போது, குழந்தைகளை, பொது இடங்களில் விட்டுச் செல்கின்றனர்; அதைக்கூட ஒருவிதத்தில் ஒப்புக் கொள்ளலாம். அதற்காக தான், தொட்டில் குழந்தை திட்டம் என்பதை, அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இன்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், பல்வேறு தம்பதியர் குழந்தை இல்லாமல் வேதனையின் விளிம்பில் வாழ்கின்றனர். சில தம்பதியருக்காக, குழந்தைகளை திருடி விற்பனை செய்து, பிறகு காவல்துறையில் மாட்டிக் கொண்ட சம்பவங்களையும் காண முடிகிறது. பெண் குழந்தைகளை போற்றிப் பாதுகாக்கும் ஒரு வம்சத்தில் வந்த, தமிழ் பெண்கள் இனியும், இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat Iyer - nagai,இந்தியா
03-டிச-201919:01:54 IST Report Abuse
venkat Iyer கவர்னரின் பணிகளை ஆளும் மாநில கட்சி விடுவதில்லை.ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்துக்கு திட்ட பணிகளுக்கு வரும் அனைத்து பணமும் திட்டங்கள் செய்யப்பட்டதா என்று கவனித்து இறுதியில் கவர்னர் கையெழுத்து போட வேண்டும்.செயல்படாத திட்டத்தில் உள்ள நிதி மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க கவர்னர் முக்கிய பொறுப்பில் உள்ளார்.அமைச்சர் ஒரு துறையில் திட்ட நிதிகளை அதிகமாக சாப்பிட்டால் முதலமைச்சருக்கு தெரிவித்து பதவி இழக்க வைக்கலாம்.வேறு ஒருவரை பரிந்துரைக்க சொல்வதற்கு அதிகாரம் கவர்னருக்கு உள்ளது.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03-டிச-201911:47:25 IST Report Abuse
D.Ambujavalli தனது ‘அழகு’ குன்றாமல், குறையாமல் இருக்க வேண்டுமானால், அந்தப் பெண்மணி (?) ஒன்று, திருமணமே செய்துகொண்டிருக்கக் கூடாது, அல்லது குழந்தை வேண்டாமென்றிருக்க வேண்டும், அல்லது புட்டிப்பால் கொடுத்தாவது வளர்த்திருக்கலாம் இந்த காரணம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லையே
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
03-டிச-201908:05:50 IST Report Abuse
Darmavan கவர்னர் பதவி அண்ணா சொன்னது போல் ஆட்டு தாடி இல்லை.அவர் மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி. அண்ணா உளறினிதெல்லாம் வேத வாக்கல்ல .சட்டமுமல்ல..,அரசியல் சட்டப்படி உள்ள மத்திய அரசின் தூதுவரை இழிவுபடுத்துவது கழகங்களின் வழக்கம்.தனக்கு யாரும் மேற்பார்வை கூடாது என்ற அகம்பாவத்தின்/ சட்ட மீறலின் விளைவு,...இது கண்டிக்கத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X