காஞ்சிபுரம் : இளையனார்வேலுார் அருகில் உள்ள குண்டு மடுவு கால்வாயில், தண்ணீர் அதிகம் செல்வதால், அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த, இளையனார்வேலுார் அருகில், குண்டு மடுவு கால்வாய் உள்ளது. இரு நாட்களாக பெய்யும் மழையால், இதன் அருகே உள்ள, ஆற்பாக்கம் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர், மேற்கண்ட கால்வாய் வழியே, தரைப்பாலத்தை தாண்டி செல்கிறது.சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், இத்தடத்தில், வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
இளையனார் வேலுார், வள்ளிமேடு, சித்தாத்துார், காவாந்தண்டலம், மாகரல், ஆற்பாக்கம் உட்பட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த குண்டு மடுவு வழியாக தான், வாலாஜாபாத் செல்ல வேண்டும்.மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக, இளையனார்வேலுார் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன.ஒரகடம் போன்ற பகுதிகளுக்கு, இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு செல்வோர், வேறு வழியாகச் செல்கின்றனர்.
மழைக்காலத்தில், இந்த பிரச்னை வழக்கமாக ஏற்படும் என்பதால், குண்டு மடுவு கால்வாயில் மேம்பாலம் கட்ட, அப்பகுதி மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.அதற்கான கட்டுமான பணி, ஐந்து மாதங்களுக்கு முன் துவக்கப்பட்டது. ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதால், இந்தாண்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சிரமப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE