வடமதுரை, : வேலாயுதம்பாளையம் அரசு டவுன் பஸ் காணப்பாடி சென்று திரும்பிய நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளதால் பல கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல்லில் இருந்து வடமதுரை வழியே சிங்காரகோட்டைக்கும், வேலாயுதம்பாளையத்திற்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ஒரு முறை வேலாயுதம்பாளையம் என்றால், அடுத்த முறை சிங்காரக்கோட்டை செல்கிறது. பல ஆண்டுகளாக காலை 9:45 மணி, இரவு 7:00 மணி நேரங்களில் வேலாயுதம்பாளையம் சென்று திரும்பும்போது சித்துார் பிரிவில் இருந்து 3 கி.மீ., துாரத்தில் உள்ள காணப்பாடி வரை சென்று மீண்டும் வடமதுரை வழியே திண்டுக்கல் சென்றது.காணப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்வோர் மற்றும் இதர பொதுமக்களுக்கு உபயோகமாக இருந்தது. தற்போது இந்த நடைமுறை நிறுத்தப்பட்டதால் பல கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.சுகாதார நிலையத்திற்கு பல கி.மீ., தொலைவுக்கு ஒற்றையடி பாதையில் நடக்கின்றனர். இதனால் காணப்பாடியில் மாலை 6:00 மணிக்கு பின் இரவு 8:15 மணிக்கே அடுத்த பஸ் சேவை கிடைக்கிறது. எனவே முன்பு போல இரு டிரிப்களில் காணப்பாடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.