திண்டுக்கல் :'இறைவனையே வியக்க வைப்பது பழந்தமிழரின் இறையியல்' என, திண்டுக்கல்லில் நடந்த புத்தக திருவிழாவில் 'ஆதார்' துணை தலைமை இயக்குனர் கோபாலன் பேசினார்.புத்தக திருவிழாவில் நடந்த சிந்தனையரங்கில் 'பழந்தமிழர் இறையியல்' எனும் தலைப்பில் அவர் பேசியது: இறைவன் தன் திட்டங்களை மனிதர்கள் மூலம் நிறைவேற்றி கொள்கிறான். 'விதி' மனிதனின் வாழ்வை நிர்ணயிக்காது. உழைப்பால் விதியை மாற்றக்கூடிய வலிமையை தான் மனிதர்கள் இறைவனின் உதவியாக கேட்கின்றனர். இறைவன் வலியை கொடுப்பது, மனிதன் பிரச்னைகளை சமாளித்து மீண்டு வர வேண்டும் என்பதற்கே.மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்ற நுால்கள் மனிதனின் வாழ்வியலை கூறுகின்றன. இந்நுால்களுக்கு தமிழர்களிடம் நாட்ட வரவில்லை. காரணம் மனிதன் தன் இன்பம், துன்பத்தில் தன்னுடன் இருக்கும் இறைவனையே நம்புகிறான். மனிதர்களே இல்லாத உலகத்தில் இறைவனுக்கு வேலை இல்லை. பிறருக்காக வாழும் மனிதர்களுக்காக தான் உலகம் இயங்குகிறது. இறைவன் வியக்கும் வகையில் அறநெறியில் வாழ்வது தான் பழந்தமிழரின் இறையியல் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.