ஆண்டிபட்டி :ஆண்டிபட்டி, பிச்சம்பட்டி கண்மாய் பகுதியில் மழை பெய்தும் தண்ணீர் தேங்காததால் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.நடப்பு ஆண்டில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை அடுத்தடுத்து பெய்ததால் ஆண்டிபட்டி பகுதியில் மானாவாரி சாகுபடி சிறப்பாக அமைந்துள்ளது. மழைக் காலத்தில் கண்மாய்களில் நீர் தேங்கினால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நேரடியாகவும், நிலத்தடிநீர் ஆதாரத்தை பயன்படுத்தியும் விவசாயத்தை தொடர முடியும்.ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நாகலாறு ஓடை, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி பகுதிகளில் இருந்து வரும் ஓடை வழியாக நீர் வரத்து ஏற்படும். இந்த ஆண்டில் அடுத்தடுத்து மழை பெய்தும் பிச்சம்பட்டி கண்மாய்க்கு எதிர்பார்த்த அளவு நீர் வரத்து இல்லை. சில நாட்களாக வந்து கண்மாய் பள்ளங்களில் தேங்கிய நீர் வற்றி விட்டது. கண்மாய் நீரில் நேரடி பாசனம் செய்ய முடியாவிட்டாலும், நிலத்தடிநீர் ஆதாரம் மேம்படும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள், பொதுமக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டிபட்டி நகர் பகுதியிலும் நிலத்தடி நீர் ஆதாரம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.