மதுரை,மதுரையில் கலப்பட, நிறமூட்டிய வெல்லம் தயாரிப்போர், விற்போருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.மருத்துவ விழிப்புணர்வால் இன்று பலரும் நாட்டு சர்க்கரை, கருப்பட்டியை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதை வைத்தும் சிலர் 'கல்லா' கட்ட துவங்கிஉள்ளனர். கருப்பட்டி, வெல்லத்திலும் கலப்படத்தை புகுத்த துவங்கியுள்ளனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கலப்பட வெல்லம் தயாரிப்பு மும்முரமாக நடப்பது தெரியவந்துள்ளது.மதுரை நகரில் சில கடைகளை கலப்பட வெல்லம் அலங்கரிக்க துவங்கியுள்ளது. கண்களை கவரும் மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வெல்லம் நல்லதுதானே என இவற்றை வாங்கி பயன்படுத்தினால் அவ்வளவு தான் என உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கின்றனர்.நியமன அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது: நிறத்தையோ, வடிவத்தையோ பார்த்து பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நிறத்தில் கவரும் வெல்லம் உடல் நலனை பாதிக்கும். இதில் வேதிப்பொருட்கள், செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தரமான வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். பொங்கலையொட்டி வெல்லம் தயாரிப்பது, விற்பதை கண்காணிக்கிறோம். கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை பாயும் என்றார்.