புதுச்சேரி:புதுச்சேரியில் மீனவர் வலையில்சிக்கிய பி.எஸ்.எல்.வி., பூஸ்டர் ராக்கெட் பாகத்தை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு, இஸ்ரோவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் நேற்று காலை கடலில் 10 நாட்டிகல் மைல் துாரத்தில் வலையை வீசினர். அந்த வலையை இழுக்க முடியாததால், திமிங்கலம் போன்ற ராட்சத மீனாக இருக்கலாம் எனக் கருதி கரையில் இருந்த மற்ற மீனவர்களை உதவிக்கு அழைத்து, வலையை கரைக்கு இழுத்து வந்தனர்.வலையில் ராக்கெட் எரிபொருளை சுமந்து செல்லும் உதிரி பாகம் இருந்தது. 30 அடி நீளத்தில் இருந்த இந்த உதிரி பாகத்தின் மேல்பகுதியில் பி.எஸ்.ஓ.எம்.எக்ஸ்.எல். தேதி 22.03.02019 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அறிவியல் தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் போலீசார், வலையில் சிக்கிய ராக்கெட் பாகத்தை ஆய்வு செய்தனர்.அதில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, கடந்த மார்ச் 22ம் தேதி, பூமியை கண்காணிக்க 'RISAT2B' என்ற செயற்கை கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் அல்லது கடந்த ஏப்ரல் 1ம் தேதி எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.இதுகுறித்து, விஞ்ஞான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் கூறுகையில், புதுச்சேரி மீனவர்கள் வலையில் சிக்கியது செயற்கை கோளை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் ராக்கெட்டின் சிறிய பூஸ்டர் ராக்கெட் ஆகும். இது பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் ஒரு பகுதி என்றார்.
இதுகுறித்த கலெக்டர் அருண் கூறுகையில், இஸ்ரோ அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் இன்று புதுச்சேரிக்கு வந்து, பூஸ்டர் ராக்கெட்டினை பார்வையிட்டு, ஆய்வுக்கு எடுத்துச் செல்ல உள்ளனர் என்றார்.1.30 நிமிடங்களில் கழன்றுவிடும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், PSMO - XL வகை ராக்கெட்டுகளில் துவக்க நிலையில் எடை துாக்கி செல்வதற்கு வசதியாக ஆறு பூஸ்டர் ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் முதல் பூஸ்டர் ராக்கெட் தான் புதுச்சேரியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கவுண்ட் டவுன் துவங்கிய 1.30 நிமிடங்களில் எடை துாக்கி செல்ல உதவி செய்துவிட்டு, கழன்று கடலில் விழுந்து விடும்.புதுச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட பூஸ்டர் ராக்கெட் முறைப்படி அனுமதி பெற்று ஆய்வுக்காக எடுத்து செல்லப்படும் என்றனர்.