திருக்கனுார்:தொடர் கனமழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டதால், திருக்கனுார் பகுதியை சுற்றியுள்ள சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வீடூர் அணை, முழுகொள்ளளவான 32 அடி நிரம்பிய நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்தது. அதனையொட்டி அணையின் பாதுகாப்பு கருதி நேற்று விடியற்காலை முதல் அணைக்கு வரும் உபரி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கூனிச்சம்பட்டு படுகையணை, செட்டிப்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை உள்ளிட்டவை நிரம்பி, அணைகளின் மீது ஒரு அடி அளவிற்கு மேல் தண்ணீர் செல்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை பொதுமக்கள், கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையொட்டி ஐ.ஜி., சுரேந்திரசிங் யாதவ், எஸ்.பி., ரங்கநாதன், திருக்கனுார் மற்றும் காட்டேரிக்குப்பம் போலீசார் ஆற்றங்கரையோர கிராமங்களை பார்வையிட்டு, ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுருத்தினர்.