ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆயத்தக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆயத்தக் கூட்டம்

Added : டிச 03, 2019

விழுப்புரம்:விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் ஆயத்த கூட்டம் விழுப்புரம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவகர் தலைமை தாங்கினார். கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை மற்றும் மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளது.இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மற்றும் வரவு, செலவு குறித்த விபரங்களை நிகழ்நேரத்தில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம் மிக துல்லியமாக நடத்த இயலும். அரசு பணியாளர்களை மிக சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் அரசு பணியாளர்கள் மற்றும் 8 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவர்.இந்த திட்டம் மாநில கணக்காயர் அலுவலகம், வருமான வரித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை விரைவில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தும் வகையில், கருவூல கணக்குத்தறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவகர், அனைத்து மாவட்டத்திற்கும் பயணம் மேற்கொண்டு, மண்டல, மாவட்ட மற்றும் சார்நிலை கருவூலங்கள் வாரியாக ஆய்வு நடத்தி, தேவையான இறுதிக்கட்ட பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.இந்த திட்டத்தை செயல்படுத்த விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டம் இணையோட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை முன்னோடியாக கொண்டு இந்த மூன்று மாவட்டங்களை மதிப்பீடு செய்து தவறுகளை நேர்செய்ய விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் ஒருங்கிணைந்த திட்ட குழுவினருடன் மருத்துவம், காவல், பள்ளிக்கல்வி துறைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் கருவூலத்திற்கு பட்டியலிடும் பணியாளர்களை கொண்டு செயல்விளக்க கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், வரும் ஜனவரி மாதம் முதல் விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்திட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.இந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைபடுத்துதல் ஆயத்த கூட்டத்தில், முதன்மை செயலர், பேசினார்.கூட்டத்தில், கூடுதல் இயக்குநர் சத்தியா, முதன்மைக் கணக்கு அலுவலர் இந்திரா, உதவி கணக்கு அலுவலர் ஐயப்பன் உட்பட விழுப்புரம், கடலுார் மற்றும் பெரம்பலுார் கருவூல அலுவலர்கள் மற்றும் விப்ரோ பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X