அதிகாலையில் ஹோமம் ; அதிகாரிகளுக்கு யோகம்!| Dinamalar

அதிகாலையில் ஹோமம் ; அதிகாரிகளுக்கு யோகம்!

Updated : டிச 09, 2019 | Added : டிச 03, 2019
Share
'டிவி'யில் ஒளிபரப்பான செய்தியை பார்த்து, உறைந்து போய் அமர்ந்திருந்தாள் சித்ரா.மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததும், ''என்னக்கா, அதிர்ச்சியில உக்கார்ந்திருக்க; ஒங்களுக்கு என்னாச்சு,'' என கேட்டாள்.''ரெண்டு நாளா நைட் நேரத்துல மழை பெஞ்சுக்கிட்டு இருந்ததுல, மேட்டுப்பாளையத்துல, சுவர் இடிஞ்சு விழுந்து, 17 பேர் இறந்துட்டாங்க. 'டிவி'யில
 அதிகாலையில் ஹோமம் ; அதிகாரிகளுக்கு யோகம்!

'டிவி'யில் ஒளிபரப்பான செய்தியை பார்த்து, உறைந்து போய் அமர்ந்திருந்தாள் சித்ரா.மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, வீட்டுக்குள் நுழைந்ததும், ''என்னக்கா, அதிர்ச்சியில உக்கார்ந்திருக்க; ஒங்களுக்கு என்னாச்சு,'' என கேட்டாள்.''ரெண்டு நாளா நைட் நேரத்துல மழை பெஞ்சுக்கிட்டு இருந்ததுல, மேட்டுப்பாளையத்துல, சுவர் இடிஞ்சு விழுந்து, 17 பேர் இறந்துட்டாங்க. 'டிவி'யில காட்டுனாங்க; பார்த்ததுல இருந்து மனசு கஷ்டமா இருக்கு,''

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். மார்க்கெட்டுல பேசிக்கிட்டாங்க. ஒரு லேடி, வெளியூர்க்காரங்களாம். உறவினர் வீட்டுக்கு வந்த நேரத்துல, மண்ணுல புதைஞ்சு இறந்துட்டாங்க. ரெண்டு பேரு, பக்கத்து வீட்டுக்காரங்க. இந்த வீட்டுல துாங்குறதுக்கு வந்திருக்காங்க,''

''அப்படியா... கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. எதிர்க்கட்சிக்காரங்க, சில பேரு, இதிலும் அரசியல் ஆதாயம் தேடுறதுக்கு முயற்சி பண்றாங்களாம்,'' என்றபடி, 'வாட்ஸ் அப்'பில் வந்த தகவலை பார்த்த மித்ரா, ''ஒரு வழியா உள்ளாட்சி தேர்தல் அறிவிச்சிட்டாங்க பார்த்தீங்களா,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, வர்ற, 5ம் தேதி சுப்ரீம் கோர்ட்டுல வழக்கு விசாரணைக்கு வருது. தேர்தல் அறிவிப்பிலும் ஏகப்பட்ட சூட்சுமம் இருக்கு. வழக்கமா தேதி அறிவிச்ச மறுநாளே வேட்பு மனு தாக்கல் செய்யச் சொல்லுவாங்க. இப்ப, 6ம் தேதி துவங்கும்னு சொல்லியிருக்காங்க.

அதாவது, 5ம் தேதி விசாரணையில உச்சநீதிமன்றம் என்ன சொல்லப் போகுதுங்கிறதுக்காக, தள்ளிப்போட்டிருக்காங்க,''''அப்ப, உள்ளாட்சி தேர்தலே நடக்காதா,'' என, அப்பாவியாய் கேட்டாள் மித்ரா.''அப்படியில்ல மித்து, இப்போதைக்கு உச்சநீதிமன்ற உத்தரவுக்கு 'வெயிட்' பண்றாங்க. 'கிரீன் சிக்னல்' கொடுத்தா, ஊராட்சிகளுக்கு நடத்தி முடிச்சிருவாங்க. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை ஏப்ரலுக்கு தள்ளி வச்சிருவாங்கன்னு சொல்றாங்க,''

''அதாவது, உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்க; நடத்தாமலும் இருப்பாங்க. அப்படித்தானே...'' ''எல்லா உள்ளாட்சி அமைப்புகள்லயும் ஆளுங்கட்சிக்காரங்களே பொறுப்புக்கு வரணும்ங்கிற மாதிரி 'பிளான்' போட்டிருக்காங்க. அதுக்கேத்த மாதிரி, 'காய்' நகர்த்தி, தேர்தல் நடத்துறக்கான ஏற்பாடுகளை செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்,''''அப்படியெல்லாம் செய்ய முடியுமா, என்ன,''''என்னப்பா, இப்படி கேட்டுட்டே. எட்டு வருஷமா அ.தி.மு.க., ஆட்சி நடந்துக்கிட்டு இருக்கிறதுனால, பெரும்பாலான அதிகாரிங்க, ஆளுங்கட்சிக்கு ஏத்த மாதிரி செயல்படுறாங்க.''இடைத்தேர்தல் சமயத்துல தி.மு.க., அனுதாபி ஆபீசர்ஸ், எப்படியும் ஆட்சி கவிழ்ந்திரும்னு எதிர்பார்த்தாங்க.

'அதிசயம்' நிகழ்ந்து, ஆட்சியை தக்க வச்சதுனால, தி.மு.க., அனுதாபிகளா இருக்குற ஆபீசர்ஸ், 'சைலன்ட்' ஆகிட்டாங்க. வெளியே தெரியாத அளவுக்கு, அவங்களும் 'சப்போர்ட்' செய்ய ஆரம்பிச்சிட்டாங்க,''''ரூ.131 கோடிக்கு வளர்ச்சி பணி செய்றதுக்கு, அவசர அவசரமா பூமி பூஜை போட்டாங்களாமே...''

''உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் போறதை முன்கூட்டியே சொல்லிட்டாங்களாம். அதனால, நேத்து காலையில, 6:15 மணிக்கு கிருஷ்ணாம்பதி குளத்துல பூஜையை ஆரம்பிச்சிருக்காங்க. 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில, ரூ.131 கோடிக்கு நாலு குளங்கள்ல வேலை பார்க்க போறாங்க. அதான், 'ஜெட்' வேகத்துல பூஜை போட்டிருக்காங்க,''

''அதெல்லாம் சரி, அதிகார மையமா இருக்கிற சமூக ஆர்வலர், எதேச்சையா எதிர் திசையில வந்தாருன்னு அதிகாரிங்க சப்பைக்கட்டு கட்டுறாங்க. புதுசா கட்டியிருக்கிற கார்ப்பரேஷன் ஆபீசுல நடந்த அதிகாலை பூஜையில கலந்துக்கிட்டாராமே. மாலை அணிவிச்சு, மரியாதை செலுத்துனாங்கன்னு கேள்விப்பட்டேனே...''

''உண்மைதாம்ப்பா, 'வாட்ஸ்அப்'புல ஏகப்பட்ட போட்டோ வந்துச்சு. குனியமுத்துார்ல 'சவுத் ஜோன்' ஆபீஸ் புதுசா கட்டியிருக்காங்க. ஞாயித்துக்கிழமை சாயங்காலம் திறப்பு விழா நடந்துச்சு. ஒரு நாளைக்கு முன்னதா, சனிக்கிழமை காலையில, கணபதி ஹோமம் நடத்தியிருக்காங்க. சமூக ஆர்வலரையும் கூப்பிட்டுருக்காங்க. அவரும் மரியாதை நிமித்தமா வந்து, தீபாராதனை காட்டிட்டு, ஆபீசை சுத்திப்பார்த்துட்டு போயிருக்காரு. அவரை குளிர்விக்கிறதுக்காக மலர் மாலை அணிவிச்சு, மரியாதை செலுத்தியிருக்காங்க,''

''திறப்பு விழா அன்னைக்கு, 'சிறப்பா' வேலை பார்த்த அதிகாரிங்கன்னு சொல்லி, யாரெல்லாம் வீட்டுக்கு வர்றாங்களோ, அவுங்களுக்கு 'அன்பு' பரிசா கேடயம் கொடுத்து கவுரவிச்சாங்களாம்,'' ''ஆளுங்கட்சிக்காரங்க என்ன வேணும்னாலும் செய்வாங்க போலிருக்கு,'' என்ற மித்ரா, ''அரசாங்கத்துல 'பவர்புல்'லா இருக்கிற ஆளுங்கட்சி வி.ஐ.பி., அழுத்தம் கொடுத்தும் கூட, நிராகரிச்சிட்டாங்களாமே,'' என, நோண்டினாள்.

''ஆமா மித்து, அரசு ஆஸ்பத்திரியில ஆர்.எம்.ஓ.,வா சவுந்திரவேல் இருந்தாரு. அவரு போன மாசம், 30ம் தேதி 'ரிடையர்' ஆகிட்டாரு. அரசாங்க தரப்புல, ஓய்வுக்கு அனுமதி கொடுத்துட்டாங்க. அவர் மேல ரெண்டு புகார் விசாரணையில இருக்கறதுனால, ஓய்வூதிய பலனை கொடுக்காம நிறுத்தி வச்சிட்டாங்க.

''புகாரை தள்ளுபடி செய்யணும்; அவருக்கே இன்னும் ஒரு வருஷம் பணி நீட்டிப்பு வழங்கணும்னு ஆளுங்கட்சி வி.ஐ.பி., அழுத்தம் கொடுத்திருக்காரு. விதிமுறையை தளர்த்தி, ஒருத்தருக்கு பதவி கொடுத்தா, ஏகப்பட்ட பேரு கேட்க ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொல்லி, கோரிக்கையை சுகாதாரத்துறை நிராகரிச்சிருச்சாம்,'' என்றபடி, நாளிதழை புரட்ட ஆரம்பித்த சித்ரா, ''நம்மூர்ல இருந்து தாம்பரத்துக்கு 'டிரெயின்' விட்டுருக்காங்களாம்,'' என்றாள்.''அக்கா, ரெண்டு நாளைக்கு முன்னாடி, ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிருந்தேன். ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் ஏகப்பட்ட கடை இருக்கு. எந்த பொருள் வித்தாலும், 'பில்' கொடுக்கணும்னு ரயில்வே நிர்வாகம் உத்தரவு போட்டிருக்கு.''பில் தரலைன்னா காசு கொடுக்க வேண்டாம்.

'நோ பில்; ப்ரீ புட்'டுன்னு, ஒவ்வொரு கடையிலும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்காங்க. ஆனா, யாரும் கொடுக்கறதில்லை; பயணிகள் கேட்டாலும் தர்றதில்லை. இதுக்கெதுக்கு சார் பில்லுனு மழுப்புறாங்க. ரயிலை பிடிக்கிற அவசரத்துல பயணிகளும் கிளம்பிடுறாங்க,'' ''அப்ப, மத்திய அரசின் அறிவிப்பு பயணிகளை ஒழுங்கா போயி சேர்றதில்லைன்னு சொல்லு'' என்ற சித்ரா, ''எஜூகேஷன் டிபார்ட்மென்ட்டுல இருக்கிற 'லேடி' அதிகாரி, முதன்மை அதிகாரி இல்லாத நேரத்துல, 'நான் தான் ஆக்டிங் அதிகாரி'ன்னு ஏகப்பட்ட 'பில்டப்' கொடுக்குறாங்களாமே...'' என, கல்வித்துறை விவகாரத்தை கிளறினாள்.

''ஆமாக்கா, அந்த ரெண்டெழுந்து 'லேடி' அதிகாரி எப்பவுமே அப்படித்தான். இயக்குனரகமே தன்னைதான் பரிந்துரைப்பதாக பெருமை பேசிட்டு இருக்காராம். கல்வித்துறை சார்ந்த எந்தவொரு நிகழ்ச்சி நடந்தாலும், தன்னோட பெயர், போட்டோ, பேப்பர்ல வரலைன்னா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை அழைச்சு, 'டோஸ்' விடுறாங்களாம். அதனால, ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கிற நிகழ்வா இருந்தாலும், நமக்கேன் வம்புங்கிற ரீதியில, அழைப்பிதழ்ல பெயரை அச்சடிக்க ஒருங்கிணைப்பாளர்கள் சொல்றாங்களாம்,'

''பெண்கள் பாதுகாப்புக்கு கடுமையா சட்டம் கொண்டு வரணும்'னு செய்தி வந்துருக்குப்பா, என்ற சித்ரா, ''லட்சக்கணக்குல கரன்சி வாங்கிட்டுதான் 'போஸ்டிங்' போட்டிருக்காங்களாம்,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறினாள்.''எங்கக்கா, கார்ப்பரேஷன்லயா... அங்கதானே துப்புரவு தொழிலாளர் பணிக்கு நேர்காணல் நடந்துச்சு...''

''இல்லப்பா, கார்ப்பரேஷன், 549 பணியிடம்தான் காலியா இருக்கு; 5,200 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தாங்க. விண்ணப்பதாரரை எப்படி கழிக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருக்காங்க. நா, சொல்ல வந்தது, எஜூகேஷன் டிபார்ட்மென்ட்டுல.''அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு ஒவ்வொரு வருஷமும் மே, ஜூன்ல 'கவுன்சிலிங்' நடக்கும்; இந்த வருஷம் முடியப் போகுது. இதுவரைக்கும் நடத்தலை. ஆனா, அரசு கலை கல்லுாரியில, குறுக்கு வழியில நாலு பேர் 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு வந்திருக்காங்களாம். ஒவ்வொருத்தரும், லட்சக்கணக்குல கொடுத்திருக்காங்க,''

''அரசு பணியில இருக்கிறவங்கள, 'டிரான்ஸ்பர்' செஞ்சா, தண்டனையா கருதப்பட்டது அந்தக்காலம்; இப்ப, பணம் சம்பாதிக்கிறதுக்கு நல்ல வழியா பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. போன மாசம் ஒருத்தருக்கு 'போஸ்டிங்' போட்டு கொடுத்திருக்காங்க. இதை கேள்விப்பட்ட பேராசிரியர்கள் அதிருப்தியில இருக்காங்களாம்,''

''போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பீதியில இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''அதுவா, சந்தேக மரண வழக்குல பிரேத பரிசோதனை அறிக்கையை நேரடி எஸ்.ஐ., அல்லது இன்ஸ்பெக்டரிடம் மட்டுமே வழங்கணுமாம். எஸ்.எஸ்.ஐ., - ஏட்டுகளே வாங்குறாங்க. ஏகப்பட்ட வழக்குல உண்மைத்தன்மை தெரியாம புதைஞ்சு போயிருக்கு.''பாட்டி இறந்த வழக்குல, ஒழுங்கா விசாரிக்காததால, வெரைட்டி ஹால் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை, 'சஸ்பெண்ட்' செஞ்சதால, போலீஸ் வட்டாரமே அதிர்ச்சியாகி இருக்கு,'' என கூறிய சித்ரா, ''கலெக்டர் ஆபீஸ்ல ஒரு வேலை இருக்கு வர்றீயா...'' என்றவாறு, ஸ்கூட்டரை எடுத்து, வெளியே நிறுத்தினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X