செஞ்சி:ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; அமெரிக்கா செல்' தலைப்பில் மெகா வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.
நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கத்தில் 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது. தமிழில் வெளியாகும் ஒரே மாணவர் பதிப்பாகும்பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளிகளுக்கிடையே மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை 'தினமலர் பட்டம்' இதழ் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் வினாடி வினா போட்டி சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், திருக்கோவிலுார், செஞ்சி பகுதிகளில் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட பள்ளிகளில் நடத்தப்படுகிறது.இறுதிப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணியின் 2 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நேரில் பார்க்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
அதையொட்டி, வினாடி வினா விருது 2019 - 20 போட்டி 'பதில் சொல்; அமெரிக்கா செல்' தலைப்பில் செஞ்சி தாலுகா ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கோலாகலமாக நடந்தது.இப்போட்டியில் 180 மாணவ, மாணவிகள் தகுதித் தேர்வு எழுதினர். அதில் 16 பேர் தேர்வு செய்யப்பட்டு 8 அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.பள்ளி தாளாளர் தெரேஸ்நாதன் 'தினமலர்' நினைவு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். போட்டியில் பங்கேற்ற 8 அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.