கள்ளக்குறச்சி:கள்ளக்குறிச்சி அருகே ஏரிக்கு செல்லும் ஓடை உடைந்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததால் கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துார் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் பெய்த பலத்த மழையில், ஆலத்துார் ஏரிக்குச் செல்லும் ஓடையில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் சென்றது.
அதில், திடீரென உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து கிராமத்தின் அனைத்து தெருக்களிலும் வழிந்தோடியது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடி விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று மழையின் அளவு குறைந்ததையடுத்து, மெல்ல மெல்ல தண்ணீர் வடிந்தது. மேலும், ஓடையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியும் தற்காலிகமாக மண்கள் கொட்டி கிராம மக்கள் சீரமைத்தனர்.