திருப்பூர்:வரி உயர்வு குறித்த அரசாணையைத் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்ட சொத்து வரி வசூல், திருப்பூர் மாநகராட்சியில் மீண்டும் துவங்கியது.தமிழகம் முழுவதும் கடந்த 2018 -19ம் நிதியாண்டில், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. வீடுகள் உள்ளிட்ட குடியிருப்புகளில் வசூலிக்கப்பட்ட சொத்துவரி 50 சதவீதமும், வர்த்தக கட்டடங்களுக்கு 100 சதவீதமும், அரசு உத்தரவுப்படி அதிகரிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பை உள்ளாட்சி அமைப்புகள் பெருமளவு வசூலித்தன. கடுமையாக உயர்த்திய சொத்து வரியை ரத்து செய்யக்கோரி பல தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், அண்மையில் இந்த சொத்துவரி உயர்வு ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்தது. இதற்கான சிறப்பு கமிட்டி அமைத்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சொத்து வரி வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சியில், இந்த உத்தரவையடுத்து சொத்து வரி வசூலிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிமக் கட்டணங்கள் ஆகியன மட்டும் வசூலிக்கப்பட்டது.முந்தைய சொத்து வரியை வசூல் செய்து கொள்ளலாம் என தற்போது உள்ளாட்சி அமைப்பு களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவையடுத்து திருப்பூர் மாநகராட்சியில், நேற்று முதல் சொத்து வரி வசூலிக்கும் பணி துவங்கியது. மாநகராட்சி பகுதியில் உள்ள வரி செலுத்தும் வீடு மற்றும் கட்டட உரிமையாளர்கள் நிலுவையில் உள்ள முந்தைய வரியை செலுத்துமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.