பொது செய்தி

தமிழ்நாடு

ஊர் கூடி தூர்வாரியதற்கு கிடைத்தது பலன்: பருவமழையால் குளத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

அன்னுார்:ஊர் மக்கள், அரசு நிதியுதவியோடு துார்வாரிய, வையாளிபாளையம் குளத்தில், 50 சதவீத அளவிற்கு மழை நீர் சேர்ந்துள்ளது. இதனால், அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தின், வடக்கு எல்லை ஊராட்சி அக்கரை செங்கப்பள்ளி. இங்கு, 26 ஏக்கர் பரப்பளவுள்ள வையாளிபாளையம் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு அருகிலுள்ள காரனுார், கரியனுார், வாக்கனாங்கொம்பு, ராமேகவுண்டனுார் ஆகிய ஊர்களிலிருந்து, பள்ளங்கள் வழியாக மழை நீர் வரும்.இந்த குளத்தில் நீர் நிரம்பினால், சுற்று வட்டாரத்தில் பல கி.மீ., துாரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆனால் இக்குளம் துார்வாரி, 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.இந்நிலையில், கடந்த ஆகஸ்டில், குடிமராமத்து மற்றும் நீர்வள ஆதாரம் பாதுகாப்பு திட்டத்தில், அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. இதையடுத்து, விவசாயிகள் கமிட்டி அமைத்தனர். ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் நிதி அளித்தனர்.கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபரில், குளத்திற்கு கரியனுார், ராமே கவுண்டனுார், செங்கப்பள்ளி ஆகிய ஊர்களிலிருந்து மழை நீர் வரும் பாதையில் இருந்த முற்செடிகள், புதர்கள், மண் மேடுகள் அகற்றப்பட்டன.ஏற்கனவே ஒழுங்கற்று இருந்த கரை ஒழுங்குபடுத்தப்பட்டு, கரையின் உயரம் மேற்கே நான்கரை அடி உயரமும், மற்ற பகுதிகளில் மூன்றரை அடி உயரமும் அதிகரிக்கப்பட்டது. குளத்தின் நடுப்பகுதியில் மழை நீர் அதிகம் தேங்கும் வகையில் 130 அடி நீளமும், 110 அடி அகலமும், ஆறு அடி ஆழமும் கொண்ட சிறு குளம் ஏற்படுத்தப்பட்டது. மேலும், 50 அடி நீளமும், 30 அடி அகலமும் மூன்றரை அடி ஆழமும் கொண்ட மூன்று சிறு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.குளத்தில் இருந்த புதர்களும், மண்மேடுகளும் அப்புறப்படுத்தப்பட்டன. பறவைகள் அமரும் வகையில் சிறு தீவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையால், குளத்திற்கு மழைநீர் வரத்து அதிகரித்துள்ளது, கிழக்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதியிலுள்ள பள்ளங்கள் வழியாக மழைநீர் குளத்திற்கு வந்துள்ளது.குளத்திற்குள் தோண்டப்பட்ட சிறு குளங்களும் நிரம்பிவிட்டன. 26 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில், 13 ஏக்கர் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'அரசு ஒதுக்கிய தொகையை விட கூடுதலாக செலவழித்து குளத்தை சீரமைத்துள்ளோம். மழைநீர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறைந்தது 2.5 கி.மீ., துாரத்திற்கு அகற்றியுள்ளோம். குளத்திற்கு நீர் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில், நிலத்தடி நீர் மட்டம் உயரும். தண்ணீர் இல்லாமல் குறைந்து வந்த கால்நடை வளர்ப்பு இனி அதிகரிக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X