சோமனுார்:விசைத்தறியாளர்களின் புதிய ஒப்பந்தக்கூலி உயர்வு கோரிக்கை குறித்து, திருப்பூர் தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஒப்பந்தப்படி கூலி வழங்குவது இல்லை. கூலியை குறைத்து வழங்குவதாக விசைத்தறி சங்கம் சார்பில், மாவட்ட நிர்வாகத்திடம் பல புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்னையால் விசைத்தறியாளர்கள் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுள்ளனர். இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவும், புதிய கூலி உயர்வு கேட்டும், விசைத்தறியாளர்கள் சங்கத்தினர், இரு மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கடந்த மாதம், கோவையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் பேச்சு நடந்த இருதரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மட்டும் பங்கேற்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், எந்த முடிவும் எடுக்கப்படாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.இந்நிலையில், திருப்பூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் புதிய கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை, நாளை காலை, 11:30 மணிக்கு நடக்கிறது. இதில், பங்கேற்க விசைத்தறி சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.செய்வதறியாத நிலைகோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'புதிய ஓப்பந்தம் ஏற்படுத்தி கூலி உயர்வு பெற்றுத்தர அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் விசைத்தறி தொழிலை தொடர முடியும். இதுவரை உரிய கூலி கிடைக்காததால், வங்கி கடன் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கியுள்ள விசைத்தறியாளர்கள் செய்வதறியாத நிலையில் உள்ளனர்' என்றனர்.