ஊட்டி:உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டு சென்றனர்.மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மாவட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்க வருகின்றனர். சராசரியாக வாரந்தோறும் குறைந்தது, 200 மனுக்கள் பெறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கெல்லாம் மனு அளிக்க மக்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார், 9:45 மணியளவில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகளை கடைபிடிக்கும் நோக்கில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவுப்படி, அலுவலக ஊழியர்கள் மனு அளிக்க வரிசையில் காத்திருந்த மக்களிடம் தெரிவித்தனர். பின், மனுக்கள் பெறும் பெட்டி கொண்டு வந்து அலுவலக நுழைவாயிலில் வைக்கப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை, மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டு சென்றனர்.இதில், முக்கிய மனுக்கள் அளிக்க வருபவர்கள் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்கின்றனர். சந்திக்க முடியாத சூழலால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.