சம்பவம் செய்தி

தமிழ்நாடு

17 உயிர்களை பலி வாங்கிய சுற்றுச்சுவர் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீர்

Added : டிச 03, 2019
Share
Advertisement
 17 உயிர்களை பலி வாங்கிய சுற்றுச்சுவர் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீர்

கோவை:மேட்டுப்பாளையம் நடூரில் சுவர் இடிந்து அருகில் இருந்த ஓட்டு வீடுகள் மீது விழுந்ததில், 17 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு அருகில் வசிப்பவர்கள் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர்.சபி, கண்ணப்பன் நகர், நடூர்: மழை பெய்து கொண்டிருந்தால், காலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். இடி இடித்தது போல் சத்தம் கேட்டது.
இடிச்சத்தம் என்றுதான் நினைத்தோம். அருகிலிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்ட ஓடிய போது தான் சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்தும், ஆட்கள் சிக்கி கொண்டதும் தெரிந்தது.ஓடிச்சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்தோம். பலனில்லை. காலை 6:00 மணிக்கு பொக்லைன் வந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வீட்டின் உரிமையாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தோம்.
அது மட்டுமின்றி இப்பகுதியில் எங்கள் குடியிருப்புகளுக்கு வர உள்ள வழியை அடைத்துள்ளனர். இத்தனை பேர் உயிரிழந்த பிறகாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணிகண்டன், கட்டடத் தொழிலாளி: சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது நிலநடுக்கம் ஏற்பட்டது போல் இருந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால், என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் ஆனது.
கற்கள் பெரியளவில் இருந்ததால் அவற்றை அகற்றுவது இயலாததாக இருந்தது. சுவர் குறித்து பலமுறை வீட்டின் உரிமையாளரிடம் புகார் தெரிவித்துள்ளோம். அது மட்டுமின்றி போலீசாரிடமும் புகார் தெரிவித்துள்ளோம். ஒரு குடும்பமே இன்று இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அனைவரும் கூலித்தொழிலாளிகள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராதாகிருஷ்ணன், குடியிருப்புவாசி: சுவர் இடிந்து குடியிருப்புகள் மீது விழுந்த சத்தம் கேட்டு அங்கு சென்றோம். ஒருவரையும் காப்பாற்ற முடியவில்லை. கண்ணெதிரே உயிருடன் அவர்கள் புதைந்தது கண்டு அதிர்ச்சியடைந்தோம். வெளியில் எடுக்க முயற்சி செய்தோம். பெரிய, பெரிய கற்கள் விழுந்ததால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றும் அறியாத குழந்தைகள் யாரோ செய்த தவறுக்காக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஆனந்தகுமாரின் சகோதரி மணி, 40: என் தம்பியின் குடும்பமே அழிந்து விட்டது. எங்கள் வீட்டு அழகு குழந்தை மகாலட்சுமி. அனைவருக்கும் செல்லம். பண்ணாரி, ஆனந்தகுமார் இருவரும் என் சகோதரர்கள். பண்ணாரி சில ஆண்டுக்கு முன் உயிரிழந்து விட்டார். இதனால், ஆனந்தகுமார், அவரது மனைவி நதியா, குழந்தைகள், லோகுராம், அட்சயா உடன் பண்ணாரி மனைவி அருக்காணி, குழந்தைகள் ஹரிசுதா, மகாலட்சுமி அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.குழந்தைகளை பார்க்க புன்செய் புளியம்பட்டியில் இருந்து உறவினர் ருக்மணி வந்திருந்தார். நதியாவின் தாயார் சின்னம்மாள் பக்கத்து வீட்டுப் பெண் திலகவதி ஆகியோர் வீட்டில் உறங்கினர். அப்போது தான் இவ்விபத்து ஏற்பட்டு, அனைவரும் உயிரிழந்துள்ளனர்.
ஆனந்தகுமாரின் தாயார் கமலம்மாள்: என் பிள்ளைகள் அனைவரும் இறந்து விட்டனர். இனி நாங்கள் இருந்து என்ன பயன். என் பிள்ளைகள் திரும்ப கிடைப்பார்களா?உயிரிழந்த சிவகாமியின் மகன் பிரதாப்: எங்கள் தாய் தான் எங்களுக்கு ஆணிவேராக இருந்தார். என் தாய் சிவகாமி, சகோதரி வைதேகி, சித்தி மகள், நிவேதா, மகன் ராமநாதன், பாட்டி, ஓபியம்மாள் ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்து விட்டனர். நானும், என் தந்தையும் மட்டும் தற்போது இருக்கிறோம்.
ஒரே நேரத்தில் அனைத்தையும் இழந்து விட்டோம்.சிவகாமியின் கணவர் பழனிசாமி: எப்போதும் என் வீட்டில் உறங்குவேன். அன்று என் அண்ணன் வீட்டில் உறங்கச் சென்றேன். காலையில் சத்தம் இடி, இடிப்பது போன்ற சத்தம் கேட்டதும், எழுந்து உட்கார்ந்தேன். என் மகன் வந்து சுவர் இடிந்து விழுந்ததை கூறியதும் பதறியடித்துக் கொண்டு ஓடினேன். கையால் மண், கற்களை தோண்டி என் குழந்தைகளை காப்பாற்ற முயன்றேன். என்னால் முடியவில்லை. அதன் பின் பொக்லைன், வந்து என் குழந்தைகளை மீட்டனர். சுவர் குறித்து பிரச்னையாகி இதுவரை மூன்று முறை மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளோம். இனி என்ன செய்வது என, தெரியவில்லை.
இடிபாடு அகற்றுவதில் சிரமம்! சம்பவ இடத்தில் இடிபாடுகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு பொக்லைன் மூலம் மிகுந்த சிரமத்துக்கு இடையே, இடிபாடுகளை அகற்றினர். விபத்து நடந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்ரமணியன், 60, மீது வழக்கு பதிந்துள்ள போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
எஸ்.பி. சுஜித்குமார் கூறுகையில், 'விபத்து தொடர்பாக வீட்டு உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த, 17 பேரின் சடலங்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது' என்றார். ஒரே பகுதியை சேர்ந்த, 17 பேர் ஒட்டுமொத்தமாக உயிரிழந்ததால், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று உறவினர்கள் திரண்டனர். உறவுகளை இழந்தவர்கள் கதறி துடித்தனர். சம்பவ இடம் மற்றும் மருத்துவமனை முழுவதும் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சடலத்தை வாங்க மறுத்து, ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இவர்களுடன் போலீசார் சமரச பேச்சு நடத்தி கலைத்தனர். முதல்வர் இன்று வருகை: தமிழக முதல்வர் பழனிசாமி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்ல இன்று மேட்டுப்பாளையம் வருகிறார். சம்பவம் நடந்த இடத்தையும் நேரில் பார்வையிட உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X