சிவகாசி:குடியிருப்பு பகுதி கிணற்றில் கழிவுகள், துார்வாரப்படாத வாறுகால் என சிவகாசி விளாம்பட்டி காமராஜர் காலனி பகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் இது நாள் வரையிலும் குடிநீர் கிடைத்ததே இல்லை. புழக்கத்திற்கு என வரும் தண்ணீரும் அனைவருக்கும் போதவில்லை.
குடியிருப்பு பகுதி அருகே பயன்பாட்டில் இல்லாத கிணறு உள்ளது. இக்கிணற்றில் நகரின் கழிவுகளை கொட்டுகின்றனர்.இதனால் நிலத்தடி நீருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். மாரியம்மன் கோயில் திடல் மழை காலங்களில் சகதியாகுவதால் இங்கு பேவர் பிளாக் அமைக்கலாம். பாலர் பள்ளி செல்லும் தெரு மற்றும் பள்ளி முன்புறம் கழிவுநீர் தேங்கி உள்ளது. எந்த தெருக்களிலும் வாறுகால் துார்வாரப்படவில்லை. கொசுத் தொல்லையால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். தெருக்களில் சிமென்ட் ரோடு பெயர்ந்து கால்களை பதம் பார்க்கிறது. சமுதாய கூடம் அருகே உள்ள நுாலகம் சேதமடைந்து செயல்படாமல் உள்ளது. நுாலகம் பின்புறம் உள்ள கிணறு முட்புதர்கள் சூழ்ந்து பயன்பாட்டில் இல்லை.
கிணற்றினை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.எந்த தெருக்களிலுமே வாறுகால் துார்வாரப்படவில்லை. மக்களே பணம் வசூல் செய்து துார்வாருகிறோம். குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது வாறுகாலை துார்வார வேண்டும். கொசு உற்பத்தியாகி இரவில் மட்டுமல்லாது இரவிலும் கடிக்கிறது. இப்பகுதியில் இதுநாள் வரையிலும் குடிநீர் கிடைக்கவே இல்லை. உப்பு தண்ணீரையே குடிக்க பயன்படுத்துகின்றனர்.- கருப்பசாமி, ஊர் நாட்டாமை, காமராஜர் காலனி.
மழை காலங்களில் மாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. இங்கு குடியிருப்பு பகுதி கிணற்றில் குழந்தைகள், வயதானவர்கள் தவறி விழ வாய்ப்புள்ளது. நுாலகம் அருகிலுள்ள கிணறு தண்ணீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. தற்போது அதுவும் துார்ந்து விட்டது. எனவே கிணற்றினை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.- மருதமுத்து, துணை நாட்டாமை, காமராஜர் காலனி.
அதிக மக்கள் தொகை இருப்பதால் ஒரு சுகாதார வளாகம் போதவில்லை. திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கூடுதலாக சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். தெருக்களில் சிமென்ட் ரோடு சேதமடைந்து கால்களை பதம் பார்க்கிறது. மயானத்தில் குளியில் தொட்டி ஏற்படுத்துவதோடு,சேதமடைந்த மின் கம்பத்தினை மாற்ற வேண்டும்.- முனியாண்டி, கிராம கணக்காளர், காமராஜர் காலனி.
பாலர் பள்ளி செல்லும் தெருவில் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. குழந்தைகள் விபரீதம் தெரியாமல் இதன் அருகிலே விளையாடுகின்றனர். இதனால் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பாலர் பள்ளி பகுதியில் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவலிங்கம், பட்டாசு தொழிலாளி, காமராஜர் காலனி,