சேலம்: சேலம் மாநகராட்சியில் இதுவரை, 52 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜன., 1முதல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை கண்காணிக்க, சேலம் மாநகராட்சியில், ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 11 மாதங்களில் நான்கு மண்டலங்களில், 4,633 கடைகளிலிருந்து, 51 ஆயிரத்து, 825 கிலோ அளவில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களிடமிருந்து, 37 லட்சத்து, 70 ஆயிரத்து, 220 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கமிஷனர் சதீஷ் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மறு சுழற்சி செய்வதற்கும், சிமென்ட் தொழிற்சாலையில் பயன்படுத்துவதற்கும், ஊரக பகுதிகளில் சாலை அமைப்பதற்கும் வழங்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து ஆய்வு நடத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.