சத்தியமங்கலம்: சத்தி அருகே, நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலம், வரதம்பாளையம் அருகே, 80 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் ஏரி உள்ளது. கடம்பூர் மலை மற்றும் மலையடிவாரத்தில் பெய்யும் மழைநீர், பிரதான நீர்வரத்தாக உள்ளது. ஏரி மூலம், 2,000 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கிணறுகள், போர்வெல்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கும் ஆதாரமாக உள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரி, ஆறு மாதங்களுக்கு முன் தூர் வாரப்பட்டது. இந்நிலையில் இரண்டு நாட்களாக கடம்பூர், சத்தி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், ஏரி நேற்று நிரம்பியது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.