ஈரோடு: கூட்டணி கட்சிகளுடன், உள்ளாட்சி தேர்தல் குறித்து, தி.மு.க.,வினர் பேச்சுவார்த்தை நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முத்துசாமி வீட்டில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், மாவட்ட செயலாளர் முத்துசாமி, அவைத்தலைவர் குமார் முருகேஷ், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முதலில், கொ.ம.தே.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன்பின், மாநகர மாவட்ட காங்., மற்றும் தெற்கு மாவட்ட காங்., நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. சீட்டு எண்ணிக்கை, தேவையான இடங்கள், தங்களுக்கு சாதகமான பஞ்சாயத்து, யூனியன் வார்டு, மாவட்ட பஞ்., வார்டு விபரங்களை மூன்று கட்சியினரும் பட்டியலிட்டனர். இதை தி.மு.க., தலைமைக்கு அனுப்பி வைத்து, அவர்கள் ஒப்புதலுக்குப்பின் அறிவிப்பதாக, மாவட்ட செயலாளர் முத்துசாமி தெரிவித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததால், ஒரு மணி நேரத்தில் முடிவுக்கு வந்ததாக, நிர்வாகிகள் கூறினர்.