அதியமான்கோட்டை: கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தர்மபுரி அடுத்துள்ள அதியமான்கோட்டை சாலை வழியாக, தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் உள்ள ரயில்வேகேட், ரயில் வரும் நேரங்களில் அடைக்கப்பட்டால், நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, மாணவர்கள், பணியாளர்களுக்கும் அவதியடைந்தனர். பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை அடுத்து கடந்த, 2017ல், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில், அதியமான்கோட்டையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. ஆமை வேகத்தில் நடந்த மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன், ரயில்வே ரோடு அருகே நிறுத்தப்பட்டது. இதனால், கலெக்டர் பங்களா வழியாக மாற்று வழியில், வாகனங்கள் தொடர்ந்து சென்று வந்தன. இங்கு, ரயில் வரும் நேரங்களில், ரயில்வே கேட் அடைக்கப்படும். இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தடுக்க, அதியமான்கோட்டை ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், தற்போது ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப் பட்டுள்ளதுடன், ரயில் பாதைக்கு மேல், பாலம் அமைக்கும் பணிக்காக, பில்லர் அமைக்க பள்ளம் தோண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதே வேகத்தில், இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.