கிருஷ்ணகிரி: பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிர்தம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவியர் பயிற்சி அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், ஊரக வேளாண் பணி அனுபவத்தில் பயிற்சி பெறும், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், பஞ்சகாவ்யா மற்றும் ஜீவாமிர்தம் தயாரித்தல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது, பஞ்சகாவ்யா தயாரிக்க மாட்டுச்சாணம், 7 கிலோ, நெய், 1 கிலோ கலந்து, மூன்று நாட்கள் நிழலில் வலைத்துணியால் மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப்பின் அதில் மாட்டு கோமியம், 10 லி., தண்ணீர் 10 லி., கலந்து, அதை நிழலில், 15 நாட்களுக்கு வலைத்துணியால் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதில் பால், 3 லி., தயிர், 2 லி., வெல்லம், 3 கிலோ, தேவையான அளவு இளநீர், பூவண் வாழை, 12 கலந்து, 30 நாட்களுக்கு நிழலில் வலைத்துணியால் மூடி வைக்க வேண்டும். 30 நாட்களுக்கு பின், 3 லி., பஞ்சகாவ்யா கரைசலை, 100 லி., தண்ணீரில் கலந்து நிலங்களுக்கும், பயிர்களுக்கும், இலை வழியாகவும், பாசனம் வழியாகவும் அளிக்கலாம். இதனால், நிலத்தில் மண் தரம் மேம்படுதல், பயிரில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்தல், விளைச்சல் அதிகரித்தல் போன்றவை குறித்து மாணவியர் எடுத்துரைத்தனர்.