ஓசூர்: ஓசூரில், அருள்முருகன் கோவிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம் நடந்தது. ஓசூர், பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில், அருள்முருகன் கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மூன்றாவது சோமவாரத்தை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், 108 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.* கார்த்திகை மாத மூன்றாவது சோமவார திங்கட்கிழமையான நேற்று, தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று, 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், காலை, 11:00 மணிக்கு, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சங்காபிஷேகம் செய்து சிவனை தரிசித்தனர். இதேபோல், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்திசிவன் கோவில், பாலக்கோடு பால்வன்னநாதர் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று, சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது.