ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியத்தில் உள்ள, 89 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவியர் பயனடையும் வகையில், அசோக் லேலண்ட் என்ற தனியார் நிறுவனம் மூலம், கடந்த ஓராண்டாக காலை உணவு வழங்கி வருகிறது. இதனால், 9,000 மாணவ, மாணவியர் காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். இத்திட்டத்தை விரிவாக்க, சூளகிரி, கெலமங்கலம், தளி ஒன்றியத்தில் உள்ள மேலும், 171 பள்ளிகளை அசோக் லேலண்ட் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அப்பள்ளிகளிலும், காலை உணவு வழங்கும் திட்டத்தை, அசோக் லேலண்ட் நிறுவனம் நேற்று துவங்கியது. தேன்கனிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த, துவக்க விழாவில், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிசந்திரா, மாணவ, மாணவியருக்கு, காலை உணவு வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் மூலம், 15 ஆயிரம் மாணவ, மாணவியர் தினமும் காலை உணவு சாப்பிட முடியும் என, அசோக் லேலண்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வட்டார கல்வி அலுவலர்கள் வெங்கட்குமார், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE