ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில், 60 யானைகளும், நொகனூர் காப்புக்காட்டில், 15க்கும் மேற்பட்ட யானைகளும் முகாமிட்டிருந்தன. இவற்றில், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 30க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் தனியாக பிரிந்து, கடந்த சில நாட்களுக்கு முன், ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு வனப்பகுதிக்கு சென்றன. இந்த யானைகள், ராயக்கோட்டை சாலையை கடந்து, போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு சென்றால் ராமாபுரம், ஆழியாளம், பாத்தக்கோட்டா, போடூர், நாயக்கனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி பகுதிகளில், சாகுபடி செய்துள்ள ராகி பயிர்கள் நாசமாகி விடும் என, விவசாயிகள் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால், யானைகள் கூட்டம் சாலையை கடக்காமல், சானமாவு வனப்பகுதியிலேயே இருந்தன. இந்நிலையில், அங்கிருந்து நேற்று அதிகாலை இடம் பெயர துவங்கிய யானைகள், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன. தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் தற்போது, 75க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில், அறுவடைக்கு தயாராக உள்ள, ராகி பயிர்களை யானைகள் கூட்டம், சேதம் செய்ய அதிக வாய்ப்புள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.