தமிழகத்தில் பெய்து வரும் வட கிழக்கு பருவ மழையால், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன; அதே நேரம் விளைநிலங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன.
நிரம்பிய அணைகள்
பவானிசாகர் அணை:
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை கொள்ளளவு, 32.8 டி.எம்.சி., நீர்மட்டம், 105 அடி. அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி, கோவை மாவட்ட பகுதிகளில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.சித்தன்குட்டை வனப்பகுதி வழியாக வரும் பவானி ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 2,246 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று மதியம், 30 ஆயிரத்து, 325 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து, நடப்பாண்டில், இரண்டாவது முறையாக, முழு கொள்ளளவை அணை எட்டியது.அணை நிரம்பியதை தொடர்ந்து, நேற்று காலை முதல், ஒன்பது கண் மேல் மதகு வழியாக, 30 ஆயிரம் கன அடி உபரி நீர், பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.இதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணை
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., நீர்மட்டம், 120 அடி.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த மழையால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,001 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று, 7,500 கன அடியாக அதிகரித்தது.வினாடிக்கு, 5,000 கன அடியாக இருந்த டெல்டா நீர் திறப்பு, நேற்று அதிகாலை முதல், 7,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர்மட்டம், 120 அடியாக இருந்தது. அணை நீர் இருப்பு தொடர்ந்து, 22 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கிறது.
விவசாயம் பாதிப்பு

வட கிழக்கு பருவ மழையால், தமிழகத்தின் சில மாவட்டங்களில், சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், வாழை, பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின; 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
மண்ணில் புதைந்த பெண்கள் மீட்பு
நீலகிரி மாவட்டம் குன்னுார், டென்ட்ஹில் பகுதியில், வீட்டின் மேல் மண் சரிந்தது. அதில், ரேவதி, 26, என்ற பெண், இடிபாடுகளில் சிக்கினார். தீயணைப்பு ஊழியர்கள், அவரை மீட்டனர். மண்ணில் புதைந்து, கசிந்து கொண்டிருந்த சமையல் காஸ் சிலிண்டரையும், நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வெளியே எடுத்தனர். வண்ணாரப்பேட்டை சாலையில் மண் சரிந்து, ஜூலியட், 54, என்பவர் சிக்கினார். அவரும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

குன்னுார் ரயில் நிலையம் அருகில் உள்ள, எம்.ஜி.ஆர்.நகர் ஆற்றோர குடியிருப்புக்குள், தண்ணீர் புகுந்தது. அங்கிருந்த நான்கு குழந்தைகள், இரண்டு கர்ப்பிணிகள் உட்பட, 40 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில், நேற்று மாலை நிலவரப்படி, மாவட்டத்தில், 52.8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக, குன்னுாரில், 10.6 செ.மீ., மழை பெய்துள்ளது.

நேற்று அதிகாலை, 5:00 முதல், 7:00 மணி வரை மட்டும், 2 செ.மீ., மழை பெய்ததால், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், 14 இடங்களில், பெரியளவிலான மண் சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''நீலகிரியில், 256 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன,'' என்றார்.
மருத்துவமனைக்குள் வெள்ளம்
பெரம்பலுார் அருகே, கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள், மழை நீர் புகுந்தது. இதனால், சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.தாழை நகரில், வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியதால், கிராம மக்கள் மேடான பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.

கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், நேற்று காலை, கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற, 27 பேரை, பெரம்பலுார் தீயணைப்பு மீட்புப் பணி துறையினர், கயிறு கட்டி மீட்டு, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கிருஷ்ணா புரம் மருத்துவமனை, நேற்று தற்காலிகமாக சமுதாய கூடத்தில் செயல்பட்டது.கல்லாற்றில் செல்லும் வெள்ளம், வழிநெடுகிலும் உள்ள ஓடைகளில் பெருக்கெடுத்து சாலை, தரைப்பாலம், சிறு பாலங்களை அடித்துச் சென்றது. இதனால், பல கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அமைச்சர் வீட்டுக்குள் குளம்

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் வீடு மற்றும் அலுவலகத்தில், மழைநீர் புகுந்தது. அமைச்சரின் படுக்கை அறை உள்ளிட்ட இடங்களிலும், தண்ணீர் புகுந்தது. வீட்டை சுற்றிலும், 1 அடி உயரத்துக்கும் மேலாக தண்ணீர் தேங்கியது.அமைச்சர் அலுவலக அதிகாரிகள், பொதுப் பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின், மோட்டார் மூலமாக, தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது.
கண்ணனாற்றில் உடைப்பு

கன மழையால், தஞ்சாவூர் மாவட்டம், காடந்தாங்குடி அணைக்கட்டுக்கு அருகில், கண்ணனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில், ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. அதன் வழியாக வெளியேறி தண்ணீர், சொக்கனாவூர் மற்றும் பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில், சாகுபடி செய்யப்பட்ட, 3,000 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களுக்குள் புகுந்தது.பொதுப்பணி துறை, வருவாய் துறை அதிகாரிகள், அப்பகுதியில் முகாமிட்டு, உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்து வருவதால், கண்ணனாற்று பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆர்பரிக்கும் அருவிகள்

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணியர் குளிக்க, வனத் துறை தடை விதித்தது.பெரியகுளத்தில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் வனப்பகுதியில் உள்ளது, கும்பக்கரை அருவி. நேற்று முன்தினம், நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.கனமழை காரணமாக, நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.