பவானிசாகர் அணை 2வது முறையாக நிரம்பியது: பவானி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு| Dinamalar

தமிழ்நாடு

பவானிசாகர் அணை 2வது முறையாக நிரம்பியது: பவானி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Added : டிச 03, 2019

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நடப்பாண்டில், இரண்டாவது முறையாக நிரம்பியது. இந்நிலையில் பவானி ஆற்றில், 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப் பட்டுள்ளதால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணை நீர்மட்டம், 105 அடி; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அணை நீர்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி, கோவை மாவட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. நேற்று காலை நிலவரப்படி, மேட்டுப் பாளையத்தில், 180 மி.மீ, குன்னூரில், 130 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. சித்தன்குட்டை வனப்பகுதி வழியாக வரும் பவானி ஆற்றில், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு, 2,246 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 16 ஆயிரத்து, 678 கன அடியாக, மதியம், 30 ஆயிரத்து, 325 கன அடியாக உயர்ந்தது. இதையடுத்து, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, முழு கொள்ளளவை அணை எட்டியது. அணை நிரம்பியதை தொடர்ந்து, நேற்று காலை முதல் ஒன்பது கண் மேல் மதகு வழியாக, 30 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் செல்கிறது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, வருவாய் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X